

கரோனா பெருந்தொற்றின்போது தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட 2,742 செவிலியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து அவர்கள் நடத்தும் போராட்டங்கள் மிகுந்த கவனம் பெற்றிருப்பதுடன், இதுபோன்ற நியமனங்கள் குறித்த கேள்விகளையும் முன்வைத்திருக்கின்றன.
கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த 2020 மே மாதத்தில் அதிமுக அரசு, ரூ.14,000 மாத ஊதியத்துடன் ஆறு மாத தற்காலிகப் பணி என்னும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செவிலியர்களை நியமித்தது. இவர்களுக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்டுவந்த பணிநீட்டிப்புக் காலம், 2022 டிசம்பர் 31உடன் முடிவடைந்ததால், பணியில் தொடர முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
இதை எதிர்த்துப் போராடிவரும் செவிலியர் சங்க நிர்வாகிகளுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்கு மாவட்ட நல்வாழ்வு சங்கங்களின் கீழ், ரூ.18,000 மாத ஊதியத்தில் தற்காலிகப் பணி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அமைச்சர் கூறினார். ஆனால் மருத்துவச் சேவைகள் இயக்குநரகத்தின் கீழ், நிரந்தரப் பணியில் தாங்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதே செவிலியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தற்காலிகப் பணியில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்க முடியாததற்கு, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு நியாயமான காரணங்கள் அரசுக்கு இருக்கலாம். மேலும், 2015இலிருந்து அதிமுக அரசு மேற்கொண்ட செவிலியர்கள் நியமனத்தில், இடஒதுக்கீட்டுக் கொள்கை சரியாகப் பின்பற்றப்படாதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் குறித்தும் அமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார்; இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை முதலமைச்சரின் பார்வைக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் எல்லா பிரச்சினைகளையும் தாண்டி, இந்த விஷயத்தை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதோடு, கரோனா பல லட்சக்கணக்கான மக்களைப் பாதித்த பெருந்தொற்றுக் காலத்தில் குறைவான ஊதியம், தற்காலிகப் பணி என்பதைப் பொருட்படுத்தாமல் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிய செவிலியர்களின் கோரிக்கையை அரசு சற்றுக் கூடுதல் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுவதை உணர்ந்து, அரசு இந்த விஷயத்தைக் கையாள வேண்டும்.
ஆள் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை இரண்டையும் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தற்காலிகப் பணியாளர்களை நியமிப்பது, அரசுப் பணிகளின் முதன்மையான சிறப்பம்சமான பணிப் பாதுகாப்பு என்பதையே அர்த்தமற்றதாக்கிவிடும். உரிய தகுதியைப் பெற்றவர்களுக்கே தற்காலிகப் பணி நியமனங்களும் வழங்கப்படுகின்றன. அவர்கள் நிரந்தரப் பணியைப் பெறுவோம் என்கிற நம்பிக்கையுடன்தான் தற்காலிகப் பணி வாய்ப்புகளை ஏற்கின்றனர்.
அந்த நம்பிக்கை பொய்யாகும்போது இதுபோன்ற போராட்டங்களைத் தவிர்க்க முடியாது. இப்படிப்பட்ட போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தால் அவற்றைக் கையாள்வதிலேயே அரசு கவனம் செலுத்த வேண்டிவரும். வருங்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டுமென்றால் தற்காலிகப் பணி நியமன நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்க வேண்டும்.