சாலைகள் படுகளங்கள் அல்ல!

சாலைகள் படுகளங்கள் அல்ல!
Updated on
1 min read

சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள், வாகன ஓட்டிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதுடன், உயிரிழப்புகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.

சமீபத்தில் தாம்பரம் - மதுரவாயில் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் இருந்த பள்ளத்தில் இடறிவிழுந்து, பின்னால் வந்த வாகனத்தால் நசுக்கப்பட்டு உயிரிழந்த இளம்பெண் ஷோபனாவின் மரணம், சாலைப் பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியத்துக்கு இன்னொரு சாட்சியம்.

குண்டும்குழியுமான சாலைகளால் தமிழகத்தில், 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், 2,499 விபத்துகள் நேர்ந்திருக்கின்றன. 523 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 2021இல் மட்டும் 109 பேர் உயிரிழந்தது இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது. தேசிய நெடுஞ்சாலையானாலும் சரி, மாநில நெடுஞ்சாலையானாலும் சரி, குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பழுது ஏற்படாத வகையில் அமைக்கப்பட வேண்டும். கூடவே, முறையான சாலைப் பராமரிப்பும் அவசியம். ஆனால் அலட்சியம், தாமதம் ஆகியவற்றால் ஐந்து ஆண்டுகள்கூட சாலைகளின் ஆயுட்காலம் நீடிப்பதில்லை.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் எனப் பல்வேறு காரணங்களால் சாலைகள் சேதமடைகின்றன. குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்குவதும் இன்னொரு பிரச்சினை. சாலையில் ஏற்படும் பள்ளங்களைச் சரிசெய்வதில் பெரும்பாலும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

பள்ளத்தைச் சரிசெய்யும்போது சாலையின் மட்டம் கவனத்தில் கொள்ளப்படாததால், பழுதுபார்க்கப்பட்ட பகுதிகள் மேடுகளாகிவிடுகின்றன. சாலைகளைச் செப்பனிடும்போது, பழைய சாலைகளைச் சுரண்டி எடுத்துவிட்டுப் புதிய சாலைகளை அமைக்க வேண்டும். ஆனால் பழுதடைந்த பழைய சாலைகள் மீது புதிய அடுக்காகச் சாலைகளைஅமைத்துக்கொண்டே செல்வதால் அவற்றின் உயரம் அதிகரித்துவிடுகிறது.

ஒப்பந்ததாரர் தனது பணியை முறையாகச் செய்கிறாரா என்று கண்காணிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பு. ஆனால், பணிகளை முழுமையாக முடிக்க முடியாத வகையில் சம்பந்தப்பட்ட துறைகளே தாமதப்படுத்துகின்றன. இளம்பெண் ஷோபனா உயிரிழக்கக் காரணமான தாம்பரம் - மதுரவாயில் புறவழிச் சாலை 32 கிமீ நீளம் கொண்டது. ஆனால், அதில் 11 கிமீ தொலைவை மட்டுமே தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சென்னை அலுவலகம் நிறைவுசெய்திருக்கிறது.

மீதமுள்ள பணிகளுக்காக டெல்லி தலைமை அலுவலகத்தின் ஒப்புதல் கோரிக் காத்திருக்கிறார்கள் அதிகாரிகள். சாலை வரி வசூலிப்பில் காட்டப்படும் அக்கறை, சாலைப் பராமரிப்பில் இல்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு. வருடாவருடம் சுங்கக் கட்டணமும் அதிகரிக்கப்படுகிறது. அதில் பராமரிப்புக் கட்டணமும் அடக்கம். இந்தியா முழுவதும், அனைத்து வகையான சாலைகளிலும் இருக்கும் பிரச்சினை இது.

நாடாளுமன்றத்தில், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக அளித்த தகவலின்படி, குண்டும்குழியுமான சாலைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளில் விபத்துகள் அதிகரித்திருக்கின்றன. 2021இல் மட்டும் உத்தரப் பிரதேசத்தில் 1,254 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில் 711 விபத்துகளும், தமிழ்நாட்டில் 459 விபத்துகளும் நேர்ந்திருக்கின்றன.

சாலை விபத்துகள் தனிமனித வாழ்வில் மட்டுமல்ல, சமூக வளர்ச்சியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன. எனவே, இதில் அரசுத் துறைகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in