

தமிழ்நாட்டில், மக்கள் அனைவருக்கும் 12 இலக்க எண்ணுடன் கூடிய ‘தமிழக மக்கள் எண்’ (மக்கள் ஐடி) என்னும் அடையாள எண்ணை உருவாக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஊடகங்களில் இத்தகவல் வெளியான நிலையில், இப்பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் மின் ஆளுமை முகமை வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளி அதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நடவடிக்கை சில முக்கியக் கேள்விகளை எழுப்புகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும், குடிமக்களுக்குத் தனியாக அடையாள எண் உருவாக்கப்பட்ட முன்னுதாரணம் இருப்பதாகத் தெரியவில்லை. இது குறித்து மாநிலத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்துள்ள விளக்கத்தில், ‘இத்திட்டம் மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனியே மென்பொருளும் தரவுகளும் உள்ளன என்றும் இத்தரவுகள் அனைத்தையும் ஒரே தரவுத் தளத்தில் ஒருங்கிணைத்துத் திட்டங்கள் தயாரித்து நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன்தான் மாநிலக் குடும்பத் தரவுத் தளத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் அதிகமாகக் குடியேறும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அடையாள எண், குடும்பத் தரவுத் தளத் திட்டம் போன்றவை பயனளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், குடும்பத் தரவுத் தளத் திட்டத்துக்கு ஆதார் எண்ணையே ஏன் பயன்படுத்தக் கூடாது என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.
குடும்ப அட்டைகளுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதையே சுலபமாகப் பயன்படுத்தலாம். கடந்த 2019இல் மாநிலத் திட்டங்கள், மானியங்களுக்கு ஆதார் தரவைப் பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது.
தற்போது மின் இணைப்பு எண்களை ஆதாருடன் இணைக்கும் நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. பத்திரப்பதிவிலும் ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. இறப்புச் சான்றிதழ்கள் பெறவும் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டியது கட்டாயமாக உள்ளது.
மேலும், தமிழக அரசின் துறைகளில் சான்றிதழ்களைப் பெற குடியிருப்புக்கான ஓர் ஆவணமாக ஆதாரையே மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இச்சூழலில் மக்களுடன் பகிரப்படாத, மக்கள் பயன்படுத்த முடியாத அடையாள எண்ணை ஒரு தரப்பாக மாநில அரசு மட்டுமே பயன்படுத்த வேண்டிய
அவசியம் என்ன?
ஆதார் எண் அறிமுகமானபோதும் நலத் திட்டங்களை உரியவர்களிடம் கொண்டு சேர்க்கவே இத்திட்டம் என மத்திய அரசு தெரிவித்தது. ‘மக்கள் ஐடி’ திட்டத்துக்கும் அதுபோன்ற காரணத்தையே மாநில அரசும் கூறுகிறது. ஒரே நோக்கத்துக்கு இரண்டுவிதமான அடையாள எண்கள் இருப்பது தேவையற்ற குழப்பத்தையே ஏற்படுத்தும்.
மேலும், இது மத்திய அரசுடன் போட்டி மனப்பான்மை சார்ந்த அணுகுமுறை என்னும் விமர்சனத்துக்கு வழிவகுக்கும். எனவே, இவ்விஷயத்தைத் தமிழக அரசு நிதானமாக அணுக வேண்டும். சாத்தியக்கூறுகள் இல்லாதபட்சத்தில் இதைக் கைவிடப் பரிசீலிக்கவும் வேண்டும்.