

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 537 நீதிபதிகளில், மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிக்கும் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்னும் தகவல் வெளியாகியுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 11%, பட்டியல் சமூகத்தினர் 2.8%, பழங்குடிகள் 1.3%, சிறுபான்மையினர் 2.6% என்கிறது அந்தத் தகவல். 20 நீதிபதிகளின் சமூகப் பின்னணி குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய நீதித் துறை சார்பில், சட்டம்-நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் அளிக்கப்பட்ட விளக்கத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான முதன்மை அதிகாரம், தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய கொலீஜியம் அமைப்பிடமே உள்ளது. இந்த அமைப்பின் பரிந்துரையின்படியே, நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். 2014இல் கொலீஜியம் அமைப்புக்கு மாற்றாக மத்திய அரசின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு கொண்டுவர முயன்றது.
ஆனால், 2015இல் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு, அந்த ஆணையம் செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டது. எனவே, நீதிபதிகள் நியமனத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளித்து, சமூகத்தின் பன்மைத்துவத்தைப் பிரதிபலிப்பது கொலீஜியத்தின் பொறுப்புதான் என்று நீதித் துறை தனது குறிப்பில் சுட்டிக்காட்டியிருப்பது நியாயமானதே.
வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதிசெய்வதற்காக மத்திய - மாநில அரசுப் பணிகளுக்கான நியமனங்களிலும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலும்கூடப் பட்டியல் சமூகத்தினருக்கெனத் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், நீதித் துறையில் இதுவரை எந்த வகையிலும் இடஒதுக்கீடு அனுமதிக்கப்படவில்லை.
இடஒதுக்கீடு இல்லாவிட்டாலும் அனைத்துச் சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட சில சமூகத்தைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து நீதிபதிகளாக ஆகிக்கொண்டிருக்கும் நிலை தொடர்கிறது. இது தொடர்பான விமர்சனங்களுக்கு நீதித் துறை முகம் கொடுத்தாக வேண்டும்.
குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த நீதிபதிகள் மட்டும்தான் அந்தச் சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு உரிய நீதியை வழங்குவார்கள் என்று சொல்ல முடியாது. இந்திய நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளின் மூலமாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், பெண்கள் ஆகியோரின் உரிமைகளையும் நலன்களையும் உறுதிசெய்துள்ளது. வி.ஆர்.கிருஷ்ணய்யர் உள்ளிட்ட முன்னேறிய சமூகங்களைச் சேர்ந்த நீதிபதிகள் பலர், சமூக நீதியின் கலங்கரை விளக்குகளாகத் திகழ்ந்துள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் இதையும் தாண்டி, நீதிபதிகள் நியமனத்தில் அனைத்துச் சமூகத்தினருக்கும் அவர்கள் மக்கள்தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் இனியேனும் தொடங்கப்பட வேண்டும். அதுவே, இந்திய நீதிமன்றங்களின் மாண்புக்கு வலு கூட்டும்!