

தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கை, அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக வெளியிடப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு, பள்ளிக் கல்வியில் மும்மொழிக் கொள்கை, மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு எனத் தேசியக் கல்விக் கொள்கை 2020இன் பல்வேறு பரிந்துரைகளைத் தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. திமுக ஆட்சி அமைத்த பிறகு, 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்குத் தனியாக மாநிலக் கல்விக் கொள்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி மாநிலக் கல்விக் கொள்கை வரைவை உருவாக்குவதற்காகக் கடந்த ஏப்ரல் மாதம், டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் கல்வியாளர்கள் மட்டுமல்லாமல், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், கர்னாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் இடம்பெற்றனர்.
இதன் மூலம் தமிழகத்தின் கல்விக் கொள்கை, மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்னும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மக்கள் கருத்துகளைப் பெற்றுள்ள இந்தக் குழு, விரைவில் தனது வரைவை அரசிடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்த தேவைகள் இருப்பதால், கல்விக் கொள்கையை மாநில அரசுகள்தான் தீர்மானிக்க வேண்டும் என்னும் கருத்தை நிராகரித்துவிட முடியாது. ஆனால், கல்வியில் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் கொள்கை முரண்பாடுகள், மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதித்துவிடக் கூடாது.
பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், மாநில அரசின் நிதியில் இயங்கினாலும் புதிய திட்டங்களுக்கான ஒப்புதல்கள், தர மதிப்பீடு உள்ளிட்ட விஷயங்களில் பல்கலைக்கழக மானியக் குழுவையும் அதன் நீட்சியாக மத்திய அரசையும் சார்ந்திருக்கின்றன.
பல்கலைக்கழக மானியக் குழு தேசியக் கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தாததால் தமிழகப்பல்கலைக்கழகங்கள் தேசியத் தரச் சான்றிதழ்களை இழக்க நேரிடும் என்று கல்வியாளர்கள் எச்சரித்துவருகின்றனர்.
தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றாவிட்டால் பல்கலைக்கழகங்களின் தர மதிப்பீட்டை உறுதிசெய்வதற்கான மாற்றுத் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.
பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்புவரை கட்டாயமாகத் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்னும் உத்தரவைச் சிறுபான்மைப் பள்ளிகள் உள்ளிட்ட தனியார் பள்ளிகள் எதிர்க்கின்றன. அரசின் இருமொழிக் கொள்கைக்கு மாறாகத் தனியார் பள்ளிகள் பலவற்றில் மூன்றாவது மொழி கற்பிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை உள்ளிட்ட லாபநோக்கச் செயல்பாடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பெரிதாகப் பலனளிக்கவில்லை.
இதுபோன்ற பிரச்சினைகளின் பின்னணியில், மாநிலக் கல்விக் கொள்கை குறித்த கேள்விகளும் சந்தேகங்களும் எழுவது இயல்பானது. அவை அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை அமைய வேண்டும்.