

புத்தாண்டு பிறந்துவிட்டது. போர் முதல் பொருளாதாரச் சிக்கல்கள் வரை எத்தனையோ பிரச்சினைகளைக் கண்ணுற்று 2023ஆம் ஆண்டுக்குள் நுழைந்துவிட்டோம். கடந்த ஆண்டில் கசப்புகளுடன், மகிழ்ச்சி தந்த தருணங்களும் நிறையவே இருந்தன. புத்தாண்டிலும் பூச்செண்டுகளும் போராட்டங்களுடன் கூடிய தருணங்கள் காத்திருக்கின்றன.
உக்ரைன் போரின் விளைவாகப் பல நாடுகளில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, கரோனா பெருந்தொற்று மீண்டும் பரவக்கூடும் எனும் செய்தி, எல்லையில் சீனாவின் சீண்டல், ரூபாயின் மதிப்பில் சரிவு, கிரிப்டோகரன்சி முறைகேடுகள், பட்டினி அதிகரிப்பு, வெறுப்புப் பேச்சுக்களால் சர்வதேச அளவில் எழுந்த விமர்சனங்கள் எனப் பல விஷயங்கள் கசப்பான தருணங்களாகக் கடந்துசென்றன. கூடவே, அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசத்தில் உருவான பொருளாதார நெருக்கடிகள் மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்தின. எனினும், இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்தது, ஜி20 அமைப்புக்குத் தலைமையேற்றது, கரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்கியது, ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் அணு ஆயுதப் போரைத் தடுக்க முயன்றது, டிஜிட்டல் கரன்சி அறிமுகம், 5ஜி வரவு எனச் சொல்லிக்கொள்ளும் விதத்திலான நல்ல தருணங்களும் நமக்கு வாய்த்தன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆன்லைன் ரம்மி தற்கொலைகள், நீட் தற்கொலைகள், சாதியப் பாகுபாடுகள், பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் எனப் பல எதிர்மறை அம்சங்களைக் கனத்த மனதுடன் கவனித்தோம். மறுபுறம், பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைத்தது, காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது போன்ற ஆக்கபூர்வ அம்சங்கள் ஆசுவாசம் அளித்தன. கடந்த ஆண்டின் கடினமான தருணங்கள் புத்தாண்டிலும் தொடரக்கூடும். குறிப்பாக, இன்னமும் முடிவுக்கு வராத உக்ரைன் போரின் தாக்கம் உலகமெங்கும் புதிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். பெருந்தொற்றுப் பரவல் இந்தியாவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாது என்றே நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். எனினும், கவனம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பெருந்தொற்றால் வாழ்வாதாரம் இழந்தவர்கள், படிப்பைத் தொடர முடியாதவர்கள் என இன்றைக்கும் இன்னலை எதிர்கொண்டிருப்பவர்களை மீட்டெடுத்தாக வேண்டும்.
புத்தாண்டு என்பது 365 பக்கங்களுடன் புதிதாக நம் கைக்குக் கிடைக்கும் நாட்குறிப்பு. நல்ல விஷயங்களால் அதை நிரப்பி நம் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்வோம். அதற்கான திட்டங்களையும் தீர்க்கமாக முன்னெடுப்போம்!