

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில், 'மின்னணுப் பரிவர்த்தனை' என்று அழைக்கப்படும் பண அட்டை, கடன் அட்டை, இணையவழிப் பரிமாற்றம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. இந்த அறிவிப்புகள் எல்லாம் எந்த அளவுக்கு மக்களைப் பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுக்கும் என்று தெரியவில்லை.
ஏற்கெனவே தும்பை விட்டு வாலைப் பிடிக்க முயலும் சூழலில் இருக்கிறது அரசு. 'மின்னணு இந்தியா 2015' கொள்கையை முன்மொழிந்த அரசு, அப்போதே இந்த வேலைகளைத் தீவிரப்படுத்தியிருக்க வேண்டும். அரசிடம் ஒரு தீர்க்கமான திட்டம் இருந்திருந்தால், பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள், சலுகைகள் மூலம் 'ஜன்தன் கணக்குகள் தொடக்கம்', 'ஆதார் அட்டைகள் விநியோகம்' போன்று முன்கூட்டிப் பெருமளவிலானோருக்கு மின்னணுப் பரிவர்த்தனை அட்டைகளைக் கொண்டுசென்றிருக்கலாம். குறைந்தபட்சம் பி.ஓ.எஸ். கையடக்கக் கருவிகளின் பயன்பாட்டையேனும் வியாபாரிகளிடம் பெருமளவில் கொண்டுசென்றிருக்கலாம். இப்போது வங்கிச் சேவைக்கு வெளியே இருக்கும் ஆகப் பெரும்பாலான மக்களை உடனடியாக உள்ளே இழுக்கும் எல்லா வழிகளும் அடைபட்டுக் கிடக்கின்றன. உதாரணமாக, வங்கிகள் இன்றிருக்கும் சுமையான சூழலில் ஒரு வாடிக்கையாளர் புதுக் கணக்கு தொடங்குவது என்பது எந்தளவுக்கு எளிமையானது?
இந்தச் சூழலில், ஏற்கெனவே மின்னணுப் பரிவர்த்தனைக்கு வாய்ப்புள்ளவர்களை அதுநோக்கி உள்ளே இழுக்கும் கவர்ச்சியும் அரசின் இப்போதைய அறிவிப்புகளில் தென்படவில்லை. “பண அட்டை, கடன் அட்டை, இ-வேலட் என்று அழைக்கப்படும் மின்னணு மணிபர்ஸ்கள், இணையவழி - செல்பேசி வழியிலான பரிவர்த்தனைகளில் ரூ.2,000 வரையிலான தொகைக்கு சேவை வரிக் கட்டணங்களிலிருந்து இப்போது விலக்கு தரப்பட்டிருக்கிறது. இந்தப் பணமற்ற பரிவர்த்தனையில் பெட்ரோல், டீசல் வாங்கினால் 0.75% தள்ளுபடி தரப்படும். 10,000-க்கும் குறைவான மக்கள்தொகை உள்ள கிராமங்களுக்குத் தலா இரு பி.ஓ.எஸ். கையடக்கக் கருவிகள் (மினி ஏடிஎம்) வழங்கப்படும். பெருநகரங்களின் புறநகர்ப் பயணிகள் மாத சீசன் ரயில் கட்டணங்களுக்கு 0.5% கட்டணச் சலுகை தரப்படும். ரயில்வே அளிக்கும் சில சேவைகளுக்கும் இதேபோல சலுகை உண்டு. இணையவழியில் டிக்கெட் வாங்கினால் காப்பீட்டுக்கான பிரீமியத்தில் தள்ளுபடிச் சலுகை உண்டு. சிறு வியாபாரிகள் கையடக்க பி.ஓ.எஸ். கருவியைப் பயன்படுத்த மாதாந்திர வாடகை குறைக்கப்படுகிறது” என்று குறிப்பிடுகிறது அரசின் அறிவிப்பு. பணமற்ற பரிவர்த்தனைக்காக ஓரிடத்தில் கூடுதலாக ஒரு நுகர்வோர் காத்திருக்க நேரும் நேரத்துடன் ஒப்பிடுகையில் இவை எதுவுமே பெரிய சலுகைகள் அல்ல.
அரசு இந்த விஷயத்தில் கொஞ்சம் தாராளமாகச் சிந்திக்கப் பழக வேண்டும். கூடிய விரைவில் கிராமங்களில் 'ரூபாய்' அட்டைகளை வழங்க அரசு உத்தேசித்திருக்கிறது. கிராமவாசிகள் இதன் பயன்பாட்டை நோக்கி நகர வேண்டும் என்றால், அரசின் சலுகைகள் கவர்ச்சிகரமானவையாக வேண்டும். வியாபாரச் சமூகத்தை நோக்கி முழுமையாக அது நகர வேண்டும். நெருக்கடி யில் சிக்கியிருக்கும் மக்கள் கொஞ்சம் மூச்சுவிட அது உதவும்!