Published : 28 Dec 2016 10:29 AM
Last Updated : 28 Dec 2016 10:29 AM

ஜெர்மனியைத் தாண்டியும் ஏஞ்சலா கவனிக்கப்படுவது ஏன்?

ஐரோப்பிய அரசியல் புயலின் நடுவில் இருக்கிறார் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல். ஜூலை மாதம் முதல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றன. சமீபத்தில், தலைநகர் பெர்லினில் நடந்த தாக்குதல் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. ஜெர்மனியின் தாராளவாதக் குடியேற்றக் கொள்கையை இந்தச் சம்பவங்கள் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஐரோப்பாவில் வேறு யாரையும்விட அதிகமான ஆற்றல் படைத்த அரசியல்வாதி ஏஞ்சலா மெர்கல். 28 நாடுகள் பங்கேற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிடத்தில் இருக்கிறார் அவர். ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் பன்முக ஜனநாயகப் பண்புகள் கொண்ட அரசியல் உணர்வுகளை உயர்த்திப் பிடிக்கும் இடத்தில் ஜெர்மனியை அவர் வைத்திருக்கிறார். அமெரிக்க அதிபராகத் தேர்வுசெய்யப்பட்ட ட்ரம்ப்புக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி, ஏஞ்சலா மெர்கலின் ஆளுமைக்கு ஒரு சான்று. அந்த வாழ்த்தில், 'ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்தல், எந்தவொரு மனிதருக்கும் கண்ணியத்தை உறுதிசெய்தல்' ஆகிய விழுமியங்களின் முக்கியத்துவத்தை அவர் சுட்டியிருந்தார். கிரேக்கத்தின் மீட்சிக்காகப் பல்வேறு தரப்பினரையும் இணைத்துக் கொண்டு, கிரேக்கப் பொருளாதார மீட்புப் பணிகளை ஜெர்மனி முன்னெடுக்கிறது. 2015-ல் குடியேறிகள் பிரச்சினை உச்சத்திலிருந்த நேரத்தில், புலம்பெயர்ந்து வந்த சிரியா மக்கள், பெரும் தொகையில் கடலில் மூழ்கி இறந்ததற்கு எதிராக உறுதியாகவும் தன்னெழுச்சி யாகவும் எதிர்வினையாற்றினார் ஏஞ்சலா மெர்கல்.

தேசியவாதிகள் எனும் பெயரில், தம் சொந்த நாட்டு நலன்களுக்காக எதையும் செய்யலாம் எனும் முழக்கங்களின் வழி எழுச்சி பெற்றுவரும் வலதுசாரிகள் மத்தியில், ஒரு தனித்த நட்சத்திரம் அவர். அந்நியர்களை வெறுக்கிற, குடியேறிகளை எதிர்க்கிற சக்திகள் எங்கும் வளர்ந்துவரும் நிலையில், ஒரு தாராளவாதியாக எல்லோரையும் அரவணைக்கும் இடத்தில் இருப்பவர்.

ஐரோப்பாவின் பொருளாதாரச் சூழல் சரியில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளி யேறியதும் அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளும் உலகெங்கும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில். சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைத்திருக்கும் சமீபத்திய நிகழ்வுகள், ஏஞ்சலாவின் செல்வாக்கைச் சரிவில் தள்ளியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றொரு வலுவான தூணான பிரான்ஸில், வலதுசாரிகள் நாளுக்கு நாள் பெருவளர்ச்சி அடைந்து வருகின்றனர். பாரீஸில் நடக்கும் எந்த நிகழ்வின் தாக்கமும் பெர்லினிலும் எதிரொலிக்கும். சவால்களை ஏஞ்சலா மெர்கல் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?

ஜெர்மனியில் வரவிருக்கும் செப்டம்பரில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் ஏஞ்சலா மெர்கல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால், அவர் முன்னிருக்கும் பெரும் பிரச்சினைகளுக்கு என்ன மாதிரியான தீர்வுகளை அவர் முன்வைக்கிறார் என்பதைப் பொறுத்தே அது அமையும். ஜெர்மனியைத் தாண்டியும் ஏஞ்சலா மெர்கலின் நகர்வுகளை உலகம் கவனிக்கிறது. ஏனென்றால், உலகெங்கும் உள்ள தாராளவாதிகளுக்கு அது புதிய வழிகளைத் திறந்துவிடக் கூடும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x