

காப்புக் காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் சுரங்கம் மற்றும் குவாரி தொழில்களில் ஈடுபட விதிக்கப்பட்டிருந்த தடையை, ஒரே ஆண்டில் தமிழக அரசு நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது சுற்றுச்சூழல், காட்டுயிர் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்த திமுக, ஆட்சியில் அமர்ந்த பிறகு அதற்கு நேரெதிராக நடந்துகொள்வது பல கேள்விகளை எழுப்புகிறது.
‘சுரங்கம், குவாரி, க்ரஷிங் போன்ற தொழில்களைக் காப்புக் காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் மேற்கொள்ளக் கூடாது’ என 2021 நவம்பர் 3 அன்று, தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகள் 1959இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அது காட்டுயிர்ப் பாதுகாப்பில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முன்னெடுப்பாகப் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த விதிகள் மீண்டும் திருத்தப்பட்டிருக்கின்றன.
நிலப் பண்பியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் முன்வைத்த பரிந்துரைகளை ஏற்று, 36(1-A)(e) விதியில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி, காப்புக் காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவில், மேற்சொன்ன தொழில்களைத் தடையின்றிச் செய்ய முடியும். அரசுக்குக் கிடைத்துவந்த நிதி குறைந்ததாக அதிகாரிகள் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில், அரசு இதை ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே காடுகள் அழிப்பு, மனித - விலங்கு எதிர்கொள்ளல், தமிழகத்தின் கனிமவளங்கள் சுரண்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்குக் கொண்டுசெல்லப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாத சூழலில், ஓராண்டுக்கு முன்னர் ஓரளவு நம்பிக்கையை உருவாக்கியிருந்த திருத்தம் இப்போது ரத்துசெய்யப்பட்டிருப்பது காட்டுயிர் ஆர்வலர்களையும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
வனவிலங்குச் சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், புலிகள் காப்பகம், யானைகளின் வழித்தடம் போன்றவற்றுக்கு இந்தத் திருத்தம் பொருந்தாது என்று அரசு விளக்கம் அளித்திருக்கிறது. ஆனால், கடலில் மீன்களுக்கு எப்படி எல்லை இல்லையோ அதேபோல் வனவிலங்குகளுக்குக் காடுகள், அவற்றை ஒட்டியுள்ள பகுதிகள் என எந்த வித்தியாசமும் கிடையாது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் இந்த இயற்கை நியதியைப் புரிந்துகொள்ளாமல் இப்படி ஆபத்தான முடிவுகளை ஆட்சியாளர்கள் எடுத்துவிடுகிறார்கள்.
ஒருபக்கம் வனப் பரப்பை அதிகரிப்பது என இலக்கு வகுத்துக்கொண்டு செயல்படும் அரசு, மறுபுறம் வருவாயை மனதில் கொண்டு தார்மிகப் பொறுப்பிலிருந்து நழுவுவது வேதனையளிக்கும் விஷயம். தமிழகத்தின் மேற்கு-கிழக்கு மலைத் தொடர்களில் காப்புக் காடுகளே அதிகம் எனச் சுட்டிக்காட்டும் காட்டுயிர் ஆர்வலர்கள், புதிய திருத்தம் மூலம் ஏற்படவிருக்கும் பல்வேறு ஆபத்துகளைப் பட்டியலிடுகிறார்கள்.
தமிழகத்துக்கே உரித்தான அரிய வகை விலங்குகளைப் பாதுகாப்பது, வன விலங்குகளைப் பாதுகாப்பது, விலங்கு - மனித எதிர்கொள்ளலைத் தவிர்க்க நடவடிக்கை எடுப்பது, வன வளத்தைப் பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளுக்காக வன ஆணையம் அமைக்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி தந்த திமுக, அரசு நிர்வாகத்தில் அமர்ந்த பின்னர் அதைக் காற்றில் பறக்கவிட்டு, குவாரி தொழில் முதலாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொள்வதா என்பது முக்கியமான இன்னொரு கேள்வி. அரசு இந்தக் கேள்விக்குச் செவிமடுக்கட்டும்!