

ராணுவரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்தி ருந்தாலும், நாச வேலைகளை நிகழ்த்துவதில் தனக்கு ஆற்றல் குறைந்துவிடவில்லை என்று மீண்டும் கொடூரமாக நிரூபித்திருக்கிறது ஐஎஸ் அமைப்பு. ஷியா முஸ்லிம்களின் புனிதத் தலங்களான நஜஃப், கர்பலா என்ற இரண்டுக்கும் நடுவில் இருக்கும் ஹில்லா மீது தாக்குதல் நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட யாத்ரீகர்களை அது கொன்றிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரானிலிருந்து வந்தவர்கள்.
இமாம் உசைனின் தியாகத் திருநாளையொட்டி, உலகெங்குமிருந்து ஷியா முஸ்லிம்கள் கர்பலாவுக்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் சமயம் பார்த்து, இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதல் மூலம் ஐஎஸ் யாருக்குக் குறிவைக்கிறது என்பது அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே புரியும். ஈரான், அமெரிக்காவின் உதவியுடன் மிகப் பெரிய தாக்குதலை நடத்தி, மோசுல் நகரை இராக்கிய அரசுப் படைகள் முற்றுகையிட்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு இத்தாக்குதலை ஐஎஸ் நிகழ்த்தியிருக்கிறது. 2014 ஜூன் முதல் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த நகரம் மோசுல்.
மோசுல் நகரை மீட்க இராக் போர் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டாலும், கணிசமான நிலப்பரப்பை இன்னமும் மீட்க வேண்டியிருக்கிறது. மேலும், இத்தாக்குதலில் பலியாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேவருகிறது. ஐஎஸ் படைகளுக்கு எதிராகக் காயம் அடைவோரில் அரசுப் படையினர் 5% என்றால், மக்களின் எண்ணிக்கை 20% ஆக இருக்கிறது. இராக்கியத் துருப்புகளில் பெரும்பாலானவர்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். மோசுல் நகரில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சன்னிகள். ஆகையால், மோசுலில் பொதுமக்கள் இறப்பு அதிகமானால், சன்னிகளின் கோபம் ஷியாக்கள் மீது அதிகரிக்கும்; இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது ஐஎஸ்ஸின் கணக்கு. இங்கு இராக் அரசின் முன்னிற்கும் பெரிய சவால் இது. இப்போது இரு விஷயங்களில் அது கவனம் செலுத்தியாக வேண்டும். மோசுல் நகரில் மக்கள் உயிரிழப்பு அதிகமாகாமல் பார்த்துக்கொண்டவாறே ஐஎஸ் மீதான தாக்குதலைப் பலப்படுத்தி, நகரை முழுமையாகத் தன் வசம் கொண்டுவர வேண்டும். அடுத்து, ஐஎஸ்ஸின் பயங்கரவாதத் தாக்குதல் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடந்திடாவண்ணம் எச்சரிக்கையாகப் பார்த்துத் தடுக்க வேண்டும்.
சமீபத்தில் நடந்த இரு பயங்கரவாதத் தாக்குதல்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட இராக்கியர்களைப் பலிவாங்கி விட்டது ஐஎஸ். அதனுடைய தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பது அதிகமானால், அரசுக்கு அது பின்னடைவாக அமையக் கூடும். அடுத்தபடியாக, சன்னிகள் மீது ஷியாக்கள் தாக்குதலைத் தொடுக்க ஐஎஸ் செய்யும் சதிக்கு இரையாகிவிடக் கூடாது. இராக் படைகள் ஐஎஸ்ஸை எதிர்த்துப் போரிடும்போது, சன்னிகளைத் தாக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எப்போதுமே எழுவதுண்டு. சன்னிகளின் நம்பிக்கையை இராக் அரசு பெற வேண்டும். இது தார்மிகரீதியில் அது பெறும் பெரும் பலம்!