வெற்றி தோல்விகளைத் தாண்டிய விளையாட்டு!
2022 இன் மிகச் சில கொண்டாட்டத் தருணங்களில் ஒன்றாக, கத்தாரில் நடந்து முடிந்திருக்கிறது ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி. தென் அமெரிக்க தேசமான அர்ஜென்டினா, ஐரோப்பிய நாடான பிரான்ஸை வென்று மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது. 92 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி நிகழ்ந்ததே இல்லை எனும் அளவுக்குப் பரபரப்பான தருணங்களைக் கொண்டிருந்த இறுதிப்போட்டி, இன்னும் பல சேதிகளை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது.
முதல் போட்டியிலேயே, சவுதி அரேபிய அணியிடம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்த அர்ஜென்டினா, உடனடியாக மீண்டெழுந்து அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. “இது வலிதரும் தோல்விதான். ஆனால், நம்பிக்கையுடன் தொடர்ந்து விளையாடுவோம்,” என்று சொன்ன அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயனல் மெஸ்ஸி, தன் மந்திரச் சொற்களை மெய்ப்பித்துக் காட்டிவிட்டார். 1986இல் மரடோனாவின் தலைமையில் உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா, இப்போது மெஸ்ஸியின் சீரிய வழிகாட்டுதலில் மீண்டும் வெற்றியைச் சுவைத்திருக்கிறது.
இந்த இறுதிப்போட்டியின் இன்னொரு முக்கிய அம்சம், நெருக்கடிக்கு நடுவே பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே வெளிப்படுத்திய தீரம். 2-0 என அர்ஜென்டினாவின் கை ஓங்கியிருந்த தருணத்தில் அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் எம்பாப்பே.
மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற நட்சத்திர வீரர்கள் அளவுக்கு அவர் புகழ்பெற்றவர் அல்லர். எனினும், 2018 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், பிரான்ஸ் குரோஷியாவை வீழ்த்தி இரண்டாவது முறையாகக் கோப்பையை வெல்ல அவர் போட்ட கோலும் ஒரு காரணம். அப்போது அவருக்கு வயது 19தான். பீலேவுக்குப் பிறகு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோல் அடித்த பதின்ம வயது வீரர் எனும் பெருமையைப் பெற்றவர் எம்பாப்பே.
எனினும், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியினரிடம் கூட்டுமுயற்சி இல்லாததால் வெற்றி கைநழுவியது. மெஸ்ஸி தனியாக கோல் போட்டதுடன், தனது அணியின் மற்ற வீரர்கள் கோல் போடவும் உதவினார். இந்தத் தொடரில் மொத்தம் ஏழு கோல்களை அடித்த மெஸ்ஸி, மூன்று கோல்களுக்கு உதவினார். ஆனால், எம்பாப்பேவைத் தவிர பிரான்ஸின் பிற வீரர்கள் சோபிக்கவில்லை. கிடைத்த பெனால்டி வாய்ப்புகளையும் தவறவிட்டனர். காயம் காரணமாக முக்கிய வீரர்கள் சிலர் இடம்பெறாமல் போனது பிரான்ஸின் தோல்விக்கு இன்னொரு காரணம்.
ஜெர்மனியிலிருந்து வெளியாகும் ‘சுய்ட்டாய்ட்ச ஸாய்டங்’ நாளிதழ், ‘கடவுளின் கால்’ எனும் பதத்துடன் மெஸ்ஸியை மெச்சியிருப்பது மிகப் பொருத்தமானது. ஏனெனில், ஹார்மோன் வளர்ச்சிக் குறைபாட்டையும் தாண்டி கால்பந்து விளையாட்டில் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டவர் மெஸ்ஸி. அவர் மீது அளப்பரிய அன்புவைத்திருந்த மரடோனாவே, அவரிடம் தலைமைப் பண்பு இல்லை என்று விமர்சித்திருந்தார்.
அதையெல்லாம் தாண்டித்தான் தனது அணிக்குக் கோப்பையை வென்று தந்திருக்கிறார் மெஸ்ஸி. அசகாய உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் உயர்வு நிச்சயம் என்பதுதான் அர்ஜென்டினாவின் வெற்றி சொல்லும் ரகசியம். விளையாட்டின் எல்லைகளைத் தாண்டிய விலைமதிப்பற்ற பாடம் அது!
