

நிர்பயா நிதி உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்த நிதியில் 30%க்கும் மேல் பயன்படுத்தப்படவில்லை எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து, பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்தாத அரசுகள் மீதான நம்பிக்கை கேள்விக்குரியதாகியிருக்கிறது.
2012 இல் டெல்லியில் நிகழ்ந்த கூட்டுப் பாலியல் வல்லுறவு சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்புக்காக ‘நிர்பயா நிதி’ திட்டத்தை 2013இல் மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி வரை ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா எனும் கேள்விகள் எழுந்தன.
2016 இல் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகே, அந்தத் திட்டம் வீணடிக்கப்படுவது வெளிச்சத்துக்கு வந்தது. நிர்பயா நிதியில் ரூ.2,000 கோடி செலவிடப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், ‘ஒரு திட்டத்துக்கான நிதி சரவரச் செலவிடப்படவில்லை என்றால், அது வார்த்தை அளவிலான திட்டமாகத்தான் இருக்கும்’ என்றும் கண்டித்தது.
பெண்களின் பாதுகாப்புக்கான நிதி என்பதால், மாவட்டங்கள் தோறும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலங்கள் அதற்கான திட்டங்களை வகுத்து நிதியைப் பெற்றன. அதிலும்கூடச் சில மாநிலங்கள் சுணக்கம் காட்டியதும், நிதியைப் பெறாமல் இருப்பதும் 2021 ஆகஸ்ட்டில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நிகழும் டெல்லி, 2018-19 நிதியாண்டில் இத்திட்டத்திலிருந்து ஒரு பைசாவைக்கூடச் செலவிடவில்லை. தமிழக அரசு, கடந்த ஆண்டுவரை 10.7% நிதியைத்தான் பயன்படுத்தியுள்ளது.
நிர்பயா நிதியை மாநிலங்களுக்கு வழங்குவதில் உள்ள தேக்கநிலை குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு 2016இல் கேள்வி எழுப்பியது. நிர்பயா நிதி, மிகக் குறைவாக அல்லது செலவிடப்படாமலேயே இருப்பது குறித்து உள்துறை அமைச்சகமும் தெரிவித்திருந்தது. ஆனால், எந்த மாற்றமும் நிகழவில்லை. பாலியல் துன்புறுத்தல், அமில வீச்சு உள்ளிட்டவற்றால் பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு வழங்கப்படும் இழப்பீடும் நிர்பயா நிதியின்கீழ் வரும்.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் ஆண்டுதோறும் வெளியிடும் புள்ளிவிவரங்கள் இப்படியான குற்றங்கள் அதிகரித்துவருவதையே காட்டுகின்றன. அதைக் கணக்கில்கொண்டு இழப்பீடு வழங்கியிருந்தால்கூட நிர்பயா நிதியின் அளவை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதில்கூட மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை. இதைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நிர்பயா நிதி குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்று 2018இல் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.
மாநில அரசுகளுக்கு இந்த நிதி 60:40 என்கிற அளவில் வழங்கப்படுகிறது. நிலப்பரப்பில் பின்தங்கிய குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு 90:10 என்கிற அளவிலும் சிறப்புத் திட்டமாக இருந்தால் 100% நிதியும் வழங்கப்படுகிறது. அப்படியிருந்தும் மாநில அரசுகள் பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டுவது கவலைக்குரியது. நிதியைப் பெறுவதில் நடைமுறைச் சிக்கலோ தாமதமோ இருந்தால் தங்கள் உரிமையைப் போராடிப் பெற வேண்டியது மாநில அரசுகளின் கடமை.