

இந்தியாவில் அகதிகள் மத்தியில் அதிகரித்துவரும் தற்கொலை மரணங்கள் குறித்து அரசு சாரா நிறுவனம் ஒன்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அதிகளவில் அகதிகள் வாழும் மாநிலங்களில் ஒன்று, தமிழ்நாடு. இந்தப் பின்னணியில் இந்த அறிக்கை நாம் கவனம் கொள்ளத்தக்க ஒன்று.
விடுதலை இயக்கம் ஒன்றால் இலங்கை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து மூண்ட உள்நாட்டுப் போரால், 1980களில் தமிழ்நாட்டுக்கு அகதிகள் வரத் தொடங்கினர். அதற்கு முன்பு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து தோட்டத் தொழிலுக்காகப் புலம்பெயர்ந்தோர் தமிழ்நாடு திரும்பினர். 2009இல் இறுதிப் போருக்குப் பிறகு பெருமளவில் அகதிகள் வந்தனர்.
தமிழக அரசின் தகவலின்படி, 29 மாவட்டங்களில் உள்ள 108 முகாம்களில், 58,492 இலங்கை அகதிகள் வாழ்ந்துவருகின்றனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, மொத்தம் 92,978 இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்துவருகின்றனர். அகதிகளின் மறுவாழ்வுக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றன. குடும்பம், தனிநபர், குழந்தைகள் ஆகியோருக்கு மாதாந்திர உதவித்தொகை அளிக்கப்பட்டுவருகிறது.
ரேஷன், கல்வி போன்ற வசதிகளையும் அரசு இலவசமாக அளித்துவருகிறது. இவை அல்லாமல் ஆண்டுக்கு ஒருமுறை ஆடை, போர்வை போன்றவையும் இலவசமாக வழங்கப்படுகின்றன. முகாம் வளர்ச்சிப் பணிக்காக, தமிழக அரசு கடந்த ஆண்டு ரூ.5 கோடி ஒதுக்கியது. மாதாந்திர உதவித்தொகையையும் ரூ.1,000இலிருந்து ரூ.1,500ஆக உயர்த்தியது. அதுபோல் இலவசப் பாத்திரங்களுக்கான தொகையைத் தமிழக அரசு ரூ.250 இலிருந்து ரூ.1285ஆக உயர்த்தியது. இலவச எரிவாயு இணைப்பும் மானிய விலையில் சிலிண்டரும் வழங்கிவருகிறது.
அகதிகளுக்கு இவை போன்று உதவிகள் வழங்கப்பட்டாலும் முகாம்களில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. இந்தப் பிரச்சினைகளை அகதிகள் பல முறை அரசுப் பிரதிநிதிகளிடம் முறையிட்டும் வந்துள்ளனர். பெரும்பாலான முகாம்களில் தண்ணீர், கழிப்பிட வசதிகள் மோசமாகவே உள்ளன. மேலும், அகதிகளைக் கண்ணியமான வேலைகளில் அமர்த்துவதில் சமூகத்தில் தயக்கம் நிலவுகிறது. செலவழித்து உயர்கல்வி படித்த அகதிகள் பலரும், ‘அகதி’ என்பதால், முறையான வேலை மறுக்கப்படுவதாகத் தெரிகிறது.
முகாம்களில் தாய்நாடு திரும்ப விருப்பம் இல்லாதவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் விரும்பும் இந்தியக் குடியுரிமை மறுக்கப்படுகிறது. இந்த அடையாளச் சிக்கல் அவர்களை மனரீதியாகப் பலவீனப்படுத்துகிறது. தொழில், கல்வி, சொந்தம் ஆகிய காரணங்களால் முகாமுக்கு வெளியே சென்றுவிட்டவர்களும் தணிக்கைக்காக முகாம்களுக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது. இது அவர்களைச் சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்துவதாக அகதிகள் பலர் உணர்கின்றனர்.
இவை எல்லாம் அகதிகளின் மனநலன்களைப் பாதிக்கும் அம்சங்கள். இதனால் அவர்களிடம் தற்கொலை எண்ணங்களும் மனச் சிதைவுப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு பல்வேறு உதவித் திட்டங்களை அகதிகளுக்காகச் செயல்படுத்திவருவது வரவேற்கத்தக்கதே. அதேபோல் அகதிகளின் மனப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் திட்டங்களையும் அரசு வகுக்க வேண்டும். மனித உரிமையை மதிக்கும் அரசின் கடமை அது.