

ஆபத்தான ஆறு பூச்சிக்கொல்லிகளுக்குத் தமிழக அரசு தற்காலிகமாகத் தடைவிதித்திருக்கிறது. கடைகளில் எளிதாகக் கிடைக்கும் பூச்சிக்கொல்லிகளை அருந்தித் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதில் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டிய அவசியமும் இருக்கிறது.
2017-18 காலகட்டத்தில், தமிழகத்தில் இந்த ஆறு பூச்சிக்கொல்லிகளை அருந்தி விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டதாக வேளாண் துறை இயக்குநர் வெளியிட்ட புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தச் சூழலில், இது தற்கொலையைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கை எனச் சொல்லப்பட்டாலும் வேளாண் துறையில் செய்யப்பட வேண்டிய முக்கிய மாற்றத்துக்கான முதல் புள்ளியாகவும் இதைக் கருத இடமிருக்கிறது.
தடை அமலில் இருக்கும் காலகட்டத்தில், இவை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும் இவற்றை நிரந்தரமாகத் தடைசெய்ய மத்திய அரசிடம் கோரிக்கைவிடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். இணையம் மூலம் இவை விற்கப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.
உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் குறித்த விழிப்புணர்வின்மை, வளர்ந்த நாடுகளிலும் நிலவியது உண்டு. 1950களில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புழக்கத்தில் இருந்த டைக்குளோரோ டைபினைல் டிரைகுளோரோ ஈத்தேன் (DDT) எனும் ரசாயனப் பூச்சிக்கொல்லியின் தீங்குகள் குறித்து சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரேச்சல் கார்ஸன் எழுதிய ‘சைலன்ட் ஸ்பிரிங்’ எனும் நூல், பெரும் விவாதத்தை உருவாக்கியது. அதன் பின்னர் அமெரிக்க அரசே அந்தப் பூச்சிக்கொல்லிக்குத் தடைவிதித்தது.
இன்றைக்குப் பல நாடுகளில் ஆபத்தான ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. மறுபுறம் கள்ளச்சந்தையில் அவை விற்கப்படும் அவலமும் தொடர்கிறது. எனினும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுகாதாரத் துறையினர் எனப் பல தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்திவருவதால், இது குறித்த விழிப்புணர்வு பரவலாகிவருகிறது. கடந்த ஜூன் மாதம், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகப் பூச்சிக்கொல்லியின் எச்சம் இருந்ததாகக் கூறி ஈரான், தைவான் போன்ற நாடுகள் அவற்றைத் திருப்பி அனுப்பியது சமீபத்திய உதாரணம்.
இந்நிலையில், இப்படி ஒரு நடவடிக்கையைத் தமிழக அரசு எடுத்திருக்கிறது. 60 நாட்களுக்கு இந்தப் பூச்சிக்கொல்லிகளை விற்கத் தடைவிதிப்பதாக அரசின் அரசாணை தெரிவிக்கிறது; அது மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம். இது நல்ல தொடக்கம்.
கூடவே, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கிழைக்காத வகையில், ரசாயனக் கலப்பில்லாத பூச்சிக்கொல்லிகளை உருவாக்க விரிவான திட்டமிடலும் அவசியம். இயற்கை விவசாயத்துக்கு முழுமையாக மாறுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என இலங்கையின் சமீபத்திய நெருக்கடிகள் உணர்த்திவிட்டன.
இதை மனதில்கொண்டு, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும். அதிக செலவில்லாத இயற்கை முறையிலான உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் உருவாக்க வேண்டும். அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என நம்புவோம்!