

இந்திய அரசமைப்பு நாளன்று, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “சட்டம் மற்றும் நீதித் துறையில் பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம்” என வலியுறுத்தியிருக்கிறார். 70 ஆண்டுகளைக் கடந்த உச்ச நீதிமன்ற வரலாற்றில், பெண் ஒருவர் தலைமை நீதிபதியாக இதுவரை நியமிக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
மத்திய சட்ட அமைச்சகம் 2020 இல் நாடாளுமன்றத்துக்கு அளித்த தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் பொறுப்பில் உள்ள நீதிபதிகளில், பெண்கள் 80 பேர்; ஆண்கள் 1,100க்கும் மேல். ‘விதி’ என்னும் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், சார்பு நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் 30% என்றும், பெண்கள் குறித்துப் போதுமான தரவுகள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் தெரியவந்தது.
இந்திய வழக்கறிஞர்களில் 10%தான் பெண்கள். உச்ச நீதிமன்றத்திலோ பெண் வழக்கறிஞர்கள் 2.9%தான். 2021இல் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹிமா கோலி, உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றதும் உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர்கூடப் பெண் இல்லை என்றானது.
தற்போது தலைமை நீதிபதி உள்பட 27 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கின்றனர். இவர்களில் மூவர் மட்டுமே பெண்கள். இந்த மூவரில் பி.வி.நாகரத்னா, பதவி மூப்பின் மூலம் 2027இல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகக்கூடும். ஆக, இந்தியா தன் முதல் பெண் தலைமை நீதிபதியைப் பெற குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறுக்கப்படும் நிலையில், அதை ஓரளவுக்காவது நேர்செய்யும் நோக்கில் இடஒதுக்கீடு கைகொடுக்கும். ஆனால், நீதித் துறையில் அந்த வாய்ப்பும் இல்லை. அரசமைப்பின் கூறுகள் 217, 224 ஆகியவற்றின் அடிப்படையில் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
அதில் பெண்கள், சமூக - பொருளாதார நிலையில் ஒடுக்கப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் போன்றோருக்கான இடஒதுக்கீடு குறித்து எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதனாலேயே நாட்டின் அதிகபட்ச அதிகாரத்தைக் கைக்கொண்டிருக்கும் நீதி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் போராடிப் பெற வேண்டியிருக்கிறது.
நீதிபதிகளின் நியமனத்தைப் பொறுத்தவரையில் கொலீஜியத்தின் பரிந்துரை முதன்மையானது என்பதால், அதைப் பொறுத்துதான் நீதிபதிகள் தேர்வும் அமைகிறது. 2017இல் அப்போதைய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் இதைக் குறிப்பிட்டதோடு, “நீதிபதிகள் நியமனத்தில் எங்கள் அதிகாரத்தின் எல்லை குறைவு என்றாலும் நியமனத்தில் பாலினச் சமத்துவம் குறித்து வலியுறுத்திவருகிறோம்” என்றார். அது நீதித் துறையில் நிதர்சனமாக வேண்டும்.
பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்கும்போதுதான் நீதித் துறை முழுமையானதாக இருக்கும். அதற்கேற்ப இடஒதுக்கீட்டை நீதித் துறையிலும் அமல்படுத்த வேண்டியது அவசியம்.