சீர்திருத்த நடவடிக்கைகள் முடங்க வேண்டாம்!
கேரளத்தில் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, அம்மாநிலப் பள்ளிகளில் மாணவ - மாணவிகளை ஒன்றாக அமர வைத்து கல்வி கற்பித்தல், ஆண் - பெண் பாகுபாடின்றி ஒரே மாதிரியான சீருடை, பள்ளி நேரத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்திருந்தது.
இந்தச் சீர்திருத்தங்களை அமல்படுத்த கேரள அரசு முயற்சி எடுத்துவந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் மத அடிப்படைவாத அமைப்புகள் சிலவற்றின் எதிர்ப்பால், கேரளத்தின் கல்விச் சீர்திருத்த நடவடிக்கை சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியாக இருந்துவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அதிகாரபூர்வமாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது; மாநில அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் மதரஸா கல்விக்கு எதிராக அமையும் என்றும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது.
கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர் அப்துர் ரஹ்மான் ரந்தாத்தனி, கண்ணூரில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, ‘மாணவர்களையும், மாணவிகளையும் பள்ளிகளில் ஒன்றாக அமர வைத்து, பாலியல் கல்வியைக் கற்பிப்பது தன்பாலின நடவடிக்கைகள் உள்ளிட்ட பல தவறான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். ஆண்-பெண் பாகுபாட்டை நீக்குகிறோம் என்ற பெயரில் மாணவிகளை ஜீன்ஸ் அணியக் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம். இப்படிச் செய்தால் நமது கலாச்சாரம் என்னவாகும்?’ என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவரது கருத்துக்கு எதிர்க் கருத்துகளும் எழுந்து, இப்பிரச்சினை அங்கு விவாதப் பொருளாக மாறியுள்ளது. கண்டனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அப்துர் ரஹ்மான், ‘கல்விச் சீர்திருத்தத்தை நான் எதிர்க்கவில்லை. சீர்திருத்தம் என்கிற பெயரில் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போக வேண்டாம். பெண்கள் கல்வியில் தற்போது அடைந்துள்ள முன்னேற்றம் இதுபோன்ற எந்த நடவடிக்கைகளும் இல்லாமலே நடந்ததுதான்’ என்று கூறியுள்ளார்.
கல்விச் சீர்திருத்தம் சர்ச்சைக்குரியதாக மாறியதை அறிந்த கேரள அரசு, இந்நடவடிக்கைகளைக் கைவிட முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. கேரள சட்டசபையில் இதுகுறித்துப் பேசிய கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, ‘நிபுணர் குழு அளித்த பரிந்துரையின்பேரில், கேரள அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
மாணவ-மாணவிகள் சமமாக அமர்ந்து படிக்கும்போது, அவர்களிடையே உள்ள பேதம் நீங்கி பண்பட்ட மனிதர்களாக மாறுவார்கள், அவர்களது தன்னம்பிக்கை உயரும் என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரிகளைக் காட்டிலும் இருபாலர் கல்லூரிகளில் இனப் பாகுபாடுகள் நீங்கி, நட்புடன் பழகும் பண்பு வளர்வது கண்கூடு.
இந்நிலையில், சில அடிப்படைவாத அமைப்புகள் மற்றும் பழமைவாதிகள் தெரிவிக்கும் எதிர்ப்புக்கு ஒரு மாநில அரசு அடிபணிந்து தனது நிலையை மாற்றிக்கொள்வது, எதிர்கால மாணவ சமுதாயத்துக்கும் கல்வி வளர்ச்சிக்கும் எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படும். மாணவ சமுதாயத்தின் நலன் கருதியும், அரசின் பொறுப்புணர்வை உணர்ந்தும் தொலைநோக்கு நடவடிக்கைகளைக் கேரள அரசு உறுதியுடன் அமல்படுத்த வேண்டும்.
