சென்னை ஐஐடி: நீர்த்துப்போகிறதா இடஒதுக்கீடு?

சென்னை ஐஐடி: நீர்த்துப்போகிறதா இடஒதுக்கீடு?
Updated on
1 min read

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் 596 பேராசிரியர்களில் 16 பேர் மட்டுமே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் மட்டுமே பழங்குடியினர் என்றும் தகவல் அறியும் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் வெளியாகியுள்ள தகவல், பேராசிரியர் பணி நியமனங்களில், சென்னை ஐஐடி இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதில்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

2021 மார்ச் நிலவரப்படி, இந்தக் கல்வி நிறுவனத்தில் பொதுப் பிரிவைச் சேர்ந்த 515 பேர் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களாக உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 62 பேர் இப்பணியிடங்களில் உள்ளனர். இந்தப் பணியிடங்களில்தான் பட்டியலினத்தைச் சேர்ந்த 16 பேரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பேரும் இருக்கிறார்கள்.

மொத்தமுள்ள 596 பணியிடங்களில் இடஒதுக்கீட்டின்படி, பட்டியலினப் பிரிவில் 89 பேர் (15%), பழங்குடியினப் பிரிவில் 45 பேர் (7.5%), இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 160 பேர் (27%) நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் பொதுப் பிரிவில் மட்டுமே 86.60% பேர் இப்பணியிடங்களில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

பேராசிரியர் பணி நியமனங்கள் தொடர்பாக, அவ்வப்போது ஆர்டிஐ தகவல்கள் வெளியாவதும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பினர் வலியுறுத்துவதும் தொடர்ந்தாலும், சென்னை ஐஐடி திட்டமிட்டே இடஒதுக்கீட்டைத் தவிர்க்கிறது என்பது தெளிவாகிறது.

மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் கல்வி, தொழில், அரசு நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட வேண்டும் என்பது இந்திய அரசமைப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னை ஐஐடி அதைத் தொடர்ந்து உதாசீனப்படுத்துவது சமூக நீதிக்கு எதிரான செயல் மட்டுமல்ல, அப்பட்டமான விதிமீறலுமாகும்.

நாட்டின் பிற ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாகவே இருந்துவருகின்றன. ஐஐடிகளில் இடஒதுக்கீட்டின் முறையான அமலாக்கம் பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட பேராசிரியர் வி.ராம்கோபால் ராவ் குழு, ஐஐடிகளில் பேராசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு தேவை என 2020 இல் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது விவாதப்பொருளானது. அந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க தயங்கும் நிலையில் ஐஐடிகள் தன்னிச்சையாக இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யும் செயலில் இறங்கியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

இடஒதுக்கீட்டின் அம்சமே கல்வி, பணியிடங்களின் அனைத்துத் தளங்களிலும் அது வழங்கப்பட வேண்டும் என்பதுதான். மேலும், பல்வேறு தருணங்களில் உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் ஆகியவை இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதிசெய்திருக்கின்றன. இதுபோன்ற சூழலில், இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள இடஒதுக்கீட்டை நிராகரிப்பது இயற்கை நீதிக்கு எதிரானது. அதை உணர்ந்து ஐஐடிகள் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பும்கூட.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in