

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் நிலையில் பெண்களுக்கு மக்களவை, மாநிலங்களவை, சட்டசபை ஆகிய அரசமைப்புச் சபைகளில் 33% இடஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்யும் 108 ஆவது சட்டத் திருத்தம் மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது.
இந்தச் சட்டத் திருத்தம், 1996இல் ஐக்கிய முன்னணிக் கூட்டணி ஆட்சியில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது; மாநிலங்களவையில் 2010இல் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதே காலகட்டத்தில் மக்களவையில் இந்த சட்டத் திருத்தம் நிறைவேறாமல் போய்விட்டது.
ஐக்கிய முன்னணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயக முன்னணி எனப் பல கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்த சட்டத் திருத்தம் அவையில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவு இருக்கும்பட்சத்தில் என்றைக்கோ நிறைவேறியிருக்க வேண்டிய சட்டத் திருத்தம் இது.
ஆனால், ஆளும் கூட்டணிக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவு இதற்குக் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். குறிப்பாக, சமூகநீதி பேசும் கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி போன்ற கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன.
1998இல் இந்த சட்டத் திருத்த மசோதாவை அப்போதைய மத்திய சட்டத் துறை அமைச்சர் தம்பிதுரை மக்களவையில் அறிமுகப்படுத்தியபோது, ராஷ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர் சுரேந்திர பிரசாத் சபாநாயகர் பாலயோகியிடமிருந்து அதன் நகலைப் பறித்துக் கிழித்தெறிந்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ், 2008இல் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியபோதும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. பெண் ஒருவர் தலைமைப் பொறுப்பு வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இதுதொடர்பான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது இன்னொரு முரண்.
பல சமூகப் பின்னணியைச் சேர்ந்த பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்துச் சட்டத் திருத்தத்தில் தெளிவாகச் சொல்லப்படவில்லை என்பது முக்கிய விமர்சனமாக வைக்கப்படுகிறது. ஏற்கெனவே பட்டியல், பழங்குடி இனத்தவருக்கான ஒதுக்கீடு 22.5% ஆக இருக்கிறது.
இதில் பெண்களுக்கான ஒதுக்கீடும் சேரும்போது அவையில் கிட்டத்தட்ட 55% ஒதுக்கீட்டுக்குப் போய்விடும் என்கிற அச்சம் இந்த எதிர்ப்பின் பின்னாலுள்ள காரணம் எனச் சொல்லப்படுகிறது. கட்சி வேறுபாடுகள் கடந்து பெரும்பாலான ஆண்களிடம் இதுகுறித்த எதிர்மறை எண்ணம் இருப்பது இந்தப் பின்னடைவுக்கு இன்னொரு முக்கியக் காரணம்.
இன்றைய நிலையில் மக்களவை, மாநிலங்களவை, சட்டசபைகள் ஆகியவற்றில் பெண்களுக்கு முறையே 14%, 12%, 9% பிரதிநிதித்துவம்தான் இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 243இன்படி, உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இந்த இடஒதுக்கீட்டையும் குறிப்பிட்டிருந்தது. இரு அவையிலும் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் பாஜக அரசு, இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். பெண்களின் வளர்ச்சிக்கும் அவர்களுக்கு எதிரான வன்முறை குறைவதற்கும் இந்தப் பிரதிநிதித்துவம் அவசியமான ஒன்று. பெண்களைக் காக்கும் அரசு எனப் பெருமிதப்படும் பாஜக அரசு, அந்தச் சமூகக் கடமையை நிறைவேற்றட்டும்!