

திருமண விவகார விசாரணை மாற்று வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் விசாரிப்பதற்காக, நீதிபதிகள் ஹிமா கோலி, பெலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அனைத்துப் பெண் நீதிபதிகள் அமர்வைத் தலைமை நீதிபதி ஒய்.சந்திரசூட் அமைத்துள்ளது வரவேற்கப்பட வேண்டியது.
உச்ச நீதிமன்றத்தில் தற்போது 3,000 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், குளிர்கால விடுமுறைக்கு முன்பாக, அனைத்து அமர்வுகளும் தினமும் 10 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள், 10 ஜாமீன் மனுக்களை விசாரிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, தலைமை நீதிபதி சந்திரசூட் அண்மையில் தெரிவித்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 8 குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்றுவருவதாகச் சொல்லப்படுகிறது. மறுபுறம் வழக்குகள் அதிகளவில் குவிந்துவருவதும் தொடர்கிறது. கரோனா காலகட்டத்தில் சில மாதங்களுக்குப் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை.
ஆனால், இணையவழி முறையில் வழக்கு விசாரணை தொடங்கியதும் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. நாளொன்றில் நூற்றுக்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. 8 குடும்ப நல நீதிமன்றங்களில், 2ஆவது நீதிமன்ற நீதிபதி கடந்த மாதம் ஓய்வுபெற்றுவிட்டதால், 7 நீதிமன்றங்கள் மட்டுமே இப்போது செயல்படுகின்றன. தற்போது தேங்கியுள்ள சுமார் 8,000 வழக்குகளை விரைந்து முடிக்க, நீதிபதிகள் முயல்வதும் தெரிகிறது. குறிப்பிட்ட வழக்குகளில் இரண்டு தரப்பினரும் முழுமையாக ஒத்துழைப்பதில்லை என்பதால், வழக்குகளை விரைந்து முடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் குடும்ப நல நீதிமன்றங்களை நாடுவதும், விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்வதும் பெருமளவு அதிகரித்துள்ளன. வெளிநாடுகளில் இருப்பவர்கள் குடும்ப நல நீதிமன்றங்களில் இணையவழி முறையில் வழக்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில்தான் விசாரணை பெரும்பாலும் தாமதமாகிறது. இப்போது பெண்களும் ஆண்களும் நேரடியாகவே நீதிமன்றங்களுக்கு வந்து, அவர்களே வாதாடத் தொடங்கியுள்ள நிலையில், குடும்ப நல நீதிமன்றங்களில் ரகசிய விசாரணையும் நடத்தப்பட்டுவருகிறது; குழந்தைகளை விசாரிக்க, தனி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஜீவனாம்சம் கேட்டு மனைவிகள் மனு தாக்கல் செய்வது, தர மறுக்கும் கணவரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கோருவது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் கணவரைக் கைதுசெய்ய உத்தரவிடக் கோருவது, குழந்தைகளை ஒப்படைக்கக் கோருவது போன்ற மனுக்கள் அதிகம் தாக்கல்செய்யப்படுகின்றன. குழந்தைகளைப் பார்க்க வேண்டும் எனக் கோரி, தாய் - தந்தை மனு தாக்கல் செய்வதும் அதிகரித்துள்ளது. சில நேரம் கணவன்-மனைவி இருவரும் நீதிபதி முன்பாகவே சண்டையிடுவதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பல்வேறு மாற்றங்கள் சமீப காலத்தில் ஏற்பட்டுவருகின்றன. அவற்றை உறுதியாக ஒழுங்குபடுத்தி நிறைவேற்றி, சட்டத் துறையைப் பாதுகாக்க மத்திய-மாநில அமைச்சரவைகள் முன்வர வேண்டும். நிலுவையில் உள்ள சிவில், குற்றவியல் வழக்குகளையும் குடும்ப நல வழக்குகளையும் உரிய முறையில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நீதித் துறையின் தனித்தன்மையைப் பாதுகாத்திடும் பொருட்டு மத்திய-மாநில அரசுகள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். - ஐவி.நாகராஜன், தொடர்புக்கு: ivnjsuba@gmail.com