

விபத்துகளால் ஏற்படும் இழப்பைப் பொருளாதாரரீதியாக எதிர்கொள்ள, அரசு தன்னாலான ஒரு தொகையை வழங்குகிறது. ஆனால், அதைப் பெறுவதில் சிவப்பு நாடா நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்துவது பெரும் கவலையளிப்பதாக உள்ளது.
தனது இரண்டு மகன்களைச் சாலை விபத்தில் இழந்த தாய் ஒருவர், இழப்பீட்டைப் பெறுவதில் இருந்த தடங்கல்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இந்தப் பிரச்சினைமீது கவனம் பாய்ச்சியிருக்கிறது. மே 22 அன்று திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் எரிவாயு சிலிண்டர்களைக் கொண்டுசென்ற வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அந்தப் பெண்ணின் இரண்டு மகன்களும் உயிரிழந்தனர்.
மோதிய வேகத்தில் அந்த வாகனம் அங்கிருந்து சென்றுவிட்டதால், விபத்துக்குக் காரணமானவர்கள் யார் என முதல் தகவல் அறிக்கையில் அந்தப் பெண்ணால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. அவர்களைக் கண்டறிவதில் காவலர்கள் போதிய கவனம் செலுத்தவும் இல்லை. அதன் பின்னர், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, விபத்துக்குக் காரணமானவர்களை அப்பெண்ணின் உறவினர்கள் அடையாளம் கண்டனர். அதன் அடிப்படையிலான புகாரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்; அதற்கேற்ப முதல் தகவல் அறிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
ஆனால், குற்றம் - குற்றவியல் கண்காணிப்பு வலை அமைப்பின் தளத்தில் (CCTNS) அந்தத் திருத்தங்கள் சேர்க்கப்படவில்லை. இந்தத் தாமதமும் அலட்சியமும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி விண்ணப்பித்தபோது முட்டுக்கட்டையாக வந்துநின்றன. தேவையான ஆவணங்களில் இருந்த இந்த இடைவெளியால், பரிதாபத்துக்குரிய அந்தத் தாய், அரசு அலுவலகங்கள் பலவற்றுக்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று.
கையறுநிலையில்தான் அவர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறார். பொதுநல வழக்காக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர். இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பலாம். அதேவேளை, சில கேள்விகளும் விடை தெரியாமல் நிற்கின்றன.
அரசு இயந்திரத்தின் கண்ணிகள் அதன் போக்கில் முறையாக இயங்கிக்கொண்டிருந்தால், சாமானியர்கள் அலைக்கழிக்கப்படும் அவலம் தவிர்க்கப்படும். நீதிமன்றத்திடம் முறையிட்டால்தான், இயல்பான அரசு நடவடிக்கையே தொய்வில்லாமல் தொடரும் என்றால், அதை எத்தனை பேரால் எதிர்கொள்ள முடியும்? தகவல் தொழில்நுட்பம் அரசு நிர்வாகத்தின் அங்கமாக மாறிப் பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதில் சுணக்கங்கள் ஏற்படுவதை எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்?
மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மக்களிடம் நிபந்தனை வைக்கும் அரசு, அதற்கான இணைய தொழில்நுட்ப வசதியை மேம்படுத்தி வைத்திருந்தால், தொழில்நுட்பரீதியாக ஏற்படும் பின்னடைவுகளைத் தவிர்த்திருக்க முடியும் எனப் பரவலாக விமர்சனம் எழுந்திருக்கிறதே! அரசு நிர்வாகம் தனது தரப்பில் அனைத்தையும் சரியாக நிர்வகித்தால், இப்படிப்பட்ட சங்கடங்களைச் சாமானியர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்காது அல்லவா? அரசு சிந்திக்க வேண்டும்!