

எந்தவொரு குற்றவியல் சட்டமும், குற்றவாளிகளைத் தப்பவிடாமல் தண்டனைக்கு உள்ளாக்கும் நோக்கில்தான் உருவாக்கப்படுகிறது. அதே சட்டம், அதன் நோக்கத்தைத் தாண்டி தவறாகப் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவந்தால், உறுதியான எல்லைக்கோட்டை வகுத்துக்கொள்வது அவசியம். காதல் உறவு தொடர்பான போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டுக் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனும் ஆக்கபூர்வமான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு.
18 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் பாலின வித்தியாசமின்றிப் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து காப்பதற்காக, போக்சோ சட்டம் 2012இல் கொண்டுவரப்பட்டது. குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் மரண தண்டனைவரை வழங்க வகை செய்யும் இந்தச் சட்டம், இன்றைய சூழலில் அத்தியாவசியமானது. இச்சட்டத்தின்மீது நம்பிக்கை கொண்டிருப்பதால்தான், பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையை நாடுவது தமிழகத்தில் அதிகமாகியிருக்கிறது. அவர்களது நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், விரைவில் நடவடிக்கை எடுப்பது அவசியம் என முதல்வர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்தப் பின்னணியில், தனிப்பட்ட விரோதம் காரணமாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்யும் வகையில் ஒரு சிலர் புகார் அளிப்பது தெரியவந்திருக்கிறது. மிக முக்கியமாக, காதல் உறவில் ஈடுபட்டிருப்பவர்களின் வயதைக் காரணம் காட்டி, அவர்கள்மீது போக்சோ வழக்குகள் தேவையில்லாமல் பதிவுசெய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
இதுபோன்ற தருணங்களில் சம்மன் அனுப்பி எதிரி, எதிர் மனுதாரர்களை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். இதன்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏன் கைதுசெய்யப்படவில்லை என்பதற்கான காரணம் பதிவுசெய்யப்பட வேண்டும். அந்தந்தப் பகுதி காவல் துறைக் கண்காணிப்பாளர் அல்லது துணை ஆணையரிடம் அனுமதி பெற்ற பிறகே மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர்கள் இந்த உத்தரவை வரவேற்றிருப்பதே, காவல் துறை சரியான பாதையில் செல்லத் தலைப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. சமீபத்தில், கடலூர் மாவட்டத்தில் மாணவிக்கு மாணவர் ஒருவர் தாலி கட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
அந்த மாணவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட நிலையில், அந்த நடவடிக்கையின் அவசியம் என்ன என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இப்படிச் சிக்கலான தருணங்களில் சட்டத்தை அமல்படுத்துவதில் இருக்கும் குழப்பங்களும், அந்த வழக்கில் வெளிச்சத்துக்கு வந்தன. இதைத் தொடர்ந்துதான் டிஜிபி இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.
ஆனால், இது மட்டும் போதாது... இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்க உளவியலாளர்கள், சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர்கள் அடங்கிய வழிகாட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும். போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில், சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். காதல் திருமணங்களுக்கு எதிரான போக்கு அதிகரித்துவரும் இந்தக் காலகட்டத்தில், காவல் துறை பொறுப்புடன் நடந்துகொண்டால், போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் நிச்சயம் நிறைவேறும்.