

‘குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு’, ‘கொத்தடிமைகளாக வேலை பார்த்துவந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் மீட்பு’ எனச் செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன. கொடுமையான சூழலிலிருந்து அவர்கள் மீட்கப்பட்டுவிட்டார்கள் எனும் நிம்மதியுடன் அந்தச் செய்திகளைக் கடந்துவிடுகிறோம். ஆனால், திரைவிழும் முன்பு அனைத்தும் சுபமாகிவிடும் என நம்பிவிட முடியாது. மீட்கப்பட்டவர்கள் - குறிப்பாகக் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்வது மிகமிக அவசியம்.
தமிழகத்தில் 2020ஐ ஒப்பிட, கடந்த ஆண்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 180% உயர்ந்திருப்பதாக, குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சார அமைப்பு (CACL) வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
தேசிய அளவில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான அமைப்புகளின் வலைப்பின்னலான சிஏசிஎல், இந்த அவலத்தின் பின்னணியில் இருக்கும் காரணிகளையும் பட்டியலிட்டிருக்கிறது. கரோனா பெருந்தொற்று காரணமாக நிகழ்ந்த வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு, பள்ளிகள் மூடப்பட்டது, இடைநிற்றல் எனப் பல்வேறு காரணிகள் இதன் பின்னே இருப்பது நாம் அறிந்ததுதான்.
குழந்தைத் தொழிலாளர்களை மீட்க அரசு, அரசு சாரா அமைப்புகள் தொடர்ந்து உழைத்துவருகின்றன. 1979இல் அமைக்கப்பட்ட குருபாதஸ்வாமி குழுவின் பரிந்துரைகளின்படி, 1986இல் குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், இலவச - கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம், சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு - பாதுகாப்பு) சட்டம் போன்ற சட்டங்களும் கொண்டுவரப்பட்டன.
இத்தனை முயற்சிகளுக்குப் பின்னரும் பட்டாசு ஆலைகள் தொடங்கி பெட்டிக்கடைகள் வரை சிறார் வேலைசெய்வதைப் பார்க்க முடிகிறது. அரசு சார்ந்த நிறுவனங்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் அரசுக் காப்பகங்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்படுகின்றனர்; ஆனால், அவர்களது மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை எனும் குரல்கள் எழுந்திருக்கின்றன. இதை வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.ஆர்.ராஜா என்பவர் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
மீட்கப்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்புப் பயிற்சி மையங்கள் அமைத்து, மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் கோரிக்கைவிடுத்திருக்கிறார். மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலகுகளும் குழந்தை நலக் குழுவினரும் மீட்கப்பட்ட குழந்தைகளை அவ்வப்போது நேரில் சந்தித்து அவர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்பதும் அவரது கோரிக்கைகளில் முக்கியமான அம்சம்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜே.சத்ய நாராயண பிரசாத் அடங்கிய அமர்வு, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. உண்மையில், மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது.
மீட்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கும் ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்குப் பயிற்சியளித்துப் பள்ளியில் சேர்க்கும் பணிகளும் நடைபெறவே செய்கின்றன. இவற்றில் ஏற்படும் தொய்வும் காட்டப்படும் அலட்சியமும்தான், மீட்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வு குறித்த கவலையை ஏற்படுத்துகின்றன. அரசு உரிய வகையில் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.