

முன்னுதாரண நடவடிக்கைகள் மிகப் பெரிய அளவில்தான் திட்டமிடப்பட வேண்டும் என்றில்லை; தொலை நோக்குடனும் மனிதாபிமானத்துடனும் எடுக்கப்படும் நடவடிக்கைகள், சிறிய அளவிலானவையாக இருந்தாலும் பெரும் நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சும் வகையில் அமைந்துவிடும். தனது 100 வார்டுகளிலும், கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய இயந்திரத்தைப் பயன்படுத்த மதுரை மாநகராட்சி எடுத்திருக்கும் முடிவு அப்படியானதுதான்.
கழிவுநீர்த் தொட்டிகளில் விஷவாயு தாக்கித் தொழிலாளர்கள் பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணைய (NCSK) புள்ளிவிவரத்தின்படி, 1993 முதல் 2022 பிப்ரவரி வரை இந்தியாவில் 989 பேர் கழிவுநீர்த் தொட்டி, நிலத்தடி சாக்கடை போன்றவற்றைச் சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழந்திருக்கிறார்கள். துப்புரவுப் பணியாளர்களின் நிலை குறித்து ஆய்வுசெய்து, மத்திய அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கும் இந்த ஆணையம், தமிழகத்தில் மட்டும் 218 பேர் இப்படியான கொடூரத்துக்குப் பலியாகியிருப்பதாகப் பதிவுசெய்திருக்கிறது.
அதன்படி, நாட்டிலேயே தமிழகத்தில்தான் கழிவுநீர்த் தொட்டி விபத்துகள்/மரணங்கள் மிக அதிகம். இரண்டாவது இடத்தில் இருக்கும் குஜராத்துடன் ஒப்பிட்டால், கூடுதலாக 65 உயிரிழப்புகள் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கின்றன. பதிவான மரணங்களின் எண்ணிக்கையைவிடவும் பதிவாகாத, கவனம்பெறாத மரணங்கள் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்.
விஷவாயுத் தாக்குதல் நேரலாம் எனத் தொழிலாளர்களை எச்சரிப்பது, பாதுகாப்புக் கருவிகள் வழங்குவது, அசம்பாவிதம் நேர்ந்தால் உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைக்க வழிசெய்வது என எதையும் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள், ஏற்பாடு செய்பவர்கள் கடைப்பிடிப்பதே இல்லை. தனியாருக்குச் சொந்தமான வீடுகள் முதல், அரசுக் கட்டிடங்கள் வரை பல்வேறு இடங்களில் இவை போன்ற விதிமீறல்களால் விபரீதங்கள் நிகழ்கின்றன. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச் சட்டம் இருந்தும், அது முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை. தொழிலாளர்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வும் இல்லை.
இந்த அவலச் சூழலில்தான், மதுரை மாநகராட்சியின் இந்த முடிவு, மாற்றத்துக்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்த ஏற்பாட்டின்படி, 8 மணி நேரத்துக்கு ரூ.81,500-க்கு இந்த இயந்திரம் வாடகைக்கு எடுக்கப்படவிருக்கிறது. 500 மீட்டர் ஆழம்வரை சுத்தம் செய்யக்கூடிய இந்த இயந்திரத்தைக் கொண்டு, தினமும் 15 முதல் 20 கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய முடியும்.
இந்த முயற்சி வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், இதில் இன்னும் பல படிகள் முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கிறது. இயந்திரங்களை வாடகைக்கு எடுப்பது நீண்ட கால நோக்கில் எந்த அளவுக்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை. மாநகராட்சி உறுப்பினர்கள் கோருவதுபோல, சொந்தமாகவே இதுபோன்ற கருவிகளை வாங்கி வைத்துக்கொள்வது, கழிவுநீர்த் தொட்டி விபத்துகள்/மரணங்கள் குறித்த பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தொழிலாளர்களின் மரணத்துக்குக் காரணமாக இருப்பவர்களுக்குக் கடும் தண்டனை அளிக்க வழிவகை செய்வது என அடுத்தடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் இந்த முயற்சி பரவலாக்கப்பட வேண்டும். அப்போதுதான் கழிவுநீர்த் தொட்டி விபத்துகள்/மரணங்கள் எனும் அவலத்தை அழித்தொழிக்க முடியும்.