

ஜம்மு அருகே உள்ள நக்ரோட்டா ராணுவ முகாமில் செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஏழு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம், காஷ்மீர் மாநிலத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் ஆயுதப் படைகள் எதிர்கொள்ளும் அதிகபட்ச ஆபத்துகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் நிகழ்ந்திருக்கும் பெரிய அளவிலான சம்பவம் இது.
ஜம்மு நகருக்கு அருகே உள்ள நக்ரோட்டா முகாமுக்குள் போலீஸார் போல் உடையணிந்த பயங்கரவாதிகள் நுழைந்து இந்தத் தாக்குதலை அரங்கேற்றியிருக்கிறார்கள். இத்தனைக்கும் இந்திய ராணுவத்தின் மிகப் பெரிய, மிக முக்கியமான படைப்பிரிவான ’16 கார்ப்ஸ்’ படைப்பிரிவின் தலைமையகத்திலிருந்து நக்ரோட்டா ராணுவ முகாம் அருகில்தான் இருக்கிறது. நக்ரோட்டாவுக்குச் செல்லும் சாலையில், பல தடுப்புகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருந்தும், அந்த முகாமுக்குள் ஆயுதங்களுடன் பயங்கர வாதிகள் நுழைந்தது எப்படி என்று விசாரிக்க வேண்டியது அவசியம்.
இந்தச் சம்பவத்தையும் சேர்த்தால், இந்த ஆண்டு மட்டும் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 90-ஐத் தொடுகிறது. கடந்த பத்தாண்டுகளில், குறிப்பாக 2003-ல் போர் நிறுத்தம் அறிவித்த பின்னர் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் குறைந்துவந்த சூழலுக்குப் பின்னர், சமீபகாலமாக மிக அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. உரி தாக்குதலுக்குப் பதிலடியாக செப்டம்பர் 29-ல் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியத் தரப்பில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 27 பேரை இழந்திருக்கிறோம்.
காஷ்மீரில் நிலவும் இத்தகைய சூழலுக்குப் பல காரணங்களைச் சொல்ல முடியும். அம்மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழல், இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவின் நிலை, இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையிலும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டிலும் நிலவும் சூழல் போன்றவை முக்கியமானவை. இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் பல. கடந்த சில மாதங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது.
எல்லைப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதா அல்லது பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழலைக் கட்டுப்படுத்துவதா எனும் விஷயத்தில் சுலபமாக முடிவெடுக்கும் சூழலில் இந்தியா இன்றைக்கு இல்லை. 2003 போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் தாக்குதல்கள், பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதற்கு வழிசெய்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. அமைதி ஏற்படுத்துதல் மிகச் சிக்கலான விஷயம். உயிரிழப்புகளைத் தடுக்க என்னென்ன வழிகள் உண்டு என்று ஆராய்வது இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான நடவடிக்கை!