

இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இந்தியச் சிறைகள் கைதிகளால் நிரம்பிவழிவது குறித்தும் சட்டரீதியான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத காரணத்தால் பெரும்பாலும் ஏழைக் கைதிகள் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவிக்கும் அவலம் குறித்தும் கவலையுடன் பேசியிருக்கிறார்; இந்த நிலையில் மாற்றம் கொண்டுவர நீதித் துறைக்கும் மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறார். நாட்டின் முதல் குடிநபர், சிறைக் கைதிகள் - குறிப்பாக பொருளாதார வசதியற்றவர்கள் - தொடர்பான அக்கறையை வெளிப்படுத்தியிருப்பது, கைதிகளின் உரிமைகளுக்காகச் சட்டரீதியாகப் போராடும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் முயற்சிகளுக்கு வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது.
நவம்பர் 26 அன்று தேசிய சட்ட நாள் நிகழ்வில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோருடன் பங்கேற்ற குடியரசுத் தலைவர் முர்மு, “சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை பெருகிவருவதால் நாம் புதிய சிறைகளைத் திறக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. முன்னேறிக்கொண்டிருக்கும் சமூகத்துக்கு புதிய சிறைகள் எதற்கு? மாறாக நாம் சிறைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
சிறிய குற்றங்களுக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் ஏழைகளுக்கு உதவ வேண்டும்” எனப் பேசியுள்ளார். ஒரு மனிதரை அறைந்தது உள்ளிட்ட சிறு குற்றங்களுக்குக்கூட பலர் சிறையில் அடைக்கப்படும் நிலையில், கொலை உள்ளிட்ட கொடிய குற்றங்களைச் செய்த பலர் சுதந்திரமாக வெளியே திரிகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் குற்றவியல் விசாரணையிலும் தண்டனையிலும் நிலவும் ஏழை - பணக்காரர் பாகுபாடுகளைக் கவனப்படுத்தியுள்ளார்.
கடுமையான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் பிணை வழங்கத் தயக்கம் காண்பிப்பதாகவும் அதனால் உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் பிணை மனுக்கள் குவிந்துகிடப்பதாகவும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சில வாரங்களுக்குமுன் கூறியிருந்தார். இது நீதிமன்றங்களின் பிரச்சினை மட்டுமல்ல குற்றம் நிரூபிக்கப்படாமலேயே சிறையில் நீண்ட காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கும் விசாரணைக் கைதிகள் தொடர்பான பிரச்சினையும்கூட. சிறைகள் நிரம்பிவழிவது குறித்த குடியரசுத் தலைவர் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகளுடன் பொருத்திப் பார்க்கத்தக்கது இது.
அரசு வழங்கும் இலவச சட்ட உதவி குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். தமக்கென்று வழக்கறிஞரை நியமித்துக்கொள்வதற்கான பொருளாதார வசதியற்ற கைதிகளுக்கு இந்த உதவியை நாடுவதிலும் பயன்படுத்துவதிலும் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அவை உடனடியாகக் களையப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பொருளாதார வசதியின்மை காரணமாக ஒருவருக்கு நீதி மறுக்கப்பட்டுவிடக் கூடாது.
நீதி விசாரணையின் அனைத்து நிலைகளிலும், தண்டனை பெற்ற கைதிகளை விடுவிப்பதிலும் அனைவரும் சமமாக நடத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். அரசுகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறைக் கைதிகளை விடுவிப்பதில் அரசியல் கணக்குகளுக்கு இடமளிக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, குற்றம் நடக்காத சூழலைச் சமூகத்தில் உருவாக்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். - மு.முருகேஷ், தொடர்புக்கு:murugesan.m@hindutamil.co.in