Published : 01 Dec 2016 10:28 AM
Last Updated : 01 Dec 2016 10:28 AM

மாபெரும் தேசத்தின் எதிர்காலம் ஒருவரிடம்!

சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரமும் செல்வாக்கும் மிக்க தலைவராக உயர்ந்துகொண்டே வருகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர், சீன ராணுவத்தின் தலைமைத் தளபதி, பொருளாதார மாற்றத்துக்கான குழுவின் தலைவர் ஆகிய பதவிகளுடன் சீன அதிபராகவும் திகழும் ஜி ஜின்பிங் இப்போது, கட்சியின் ‘மையத் தலைவர்’ என்று அழைக்கப்படுபவர் ஆகிவிட்டார்.

கடந்த மாதத்தில் தலைநகர் பெய்ஜிங்கில் சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்ற 4 நாள் கூட்டத்துக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர், தலைவரான மாசேதுங் இப்படித்தான் அறிவிக்கப்பட்டார். மாசேதுங், டெங் சியோபிங்கைப் போல ஜி ஜின்பிங்கும் இனி நிகரில்லாத் தலைவராகக் கருதப்படுவார்.

ஹு ஜின்டாவ் அதிபராகப் பதவி வகித்த காலத்தில் அறிவிக்கப்பட்ட ‘கூட்டுத் தலைமை’ என்ற கொள்கைக்கு மாறுபட்டதாக இந்த அதிகாரக் குவிப்பு இருக்கிறது. மையத் தலைவர் என்று ஹு ஜின்டாவ் அழைக்கப்படவில்லை. தனக்கு முன்னால் பதவியில் இருந்தவரைப்போலத் தான் இருக்கப் போவதில்லை என்று பதவியேற்றது முதலே தனது செயல்களால் உணர்த்திவருகிறார் ஜி ஜின்பிங்.

டெங் காலத்துக்குப் பிறகு அதிகாரமும் செல்வாக்கும் மிக்க தலைவராக ஜி ஜின்பிங் உருவெடுத்துவருகிறார். ஊழலுக்கு எதிரான போர், ஊழல் அதிகாரிகள் களையெடுப்பு என்ற பெயரில் கட்சி நிர்வாகத்திலிருந்து ஏராளமானோரை விலக்கிவருகிறார். கட்சியின் 8.87 கோடி உறுப்பினர்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை ஊழலில் ஈடுபட்டதாக விலக்கிவிட்டார் என்றும் தெரிகிறது. இன்றைய சீனத்தின் முக்கியமான பிரச்சினைகளில் ஊழல்தான் மிகப் பெரியது எனும் பின்னணியில் மட்டும் இந்த நடவடிக்கை பார்க்கப்படவில்லை. அதிகாரங்களைத் குவித்துவருகிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

முன்னதாக, ஹு ஜின்டாவ் ஆட்சிக் காலத்தில் ஊழல் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டாலும் அவருடைய ஆட்சிக் காலத்தில் சீனர்கள் அமைதியாகவும் வளத்துடனும் வாழ்ந்தார்கள். ஜி ஜின்பிங் காலத்தில் பொருளாதார வளர்ச்சி மந்தமாகி இருக்கிறது; புவிசார் அரசியலும் மிகுந்த பதற்றத்தில் சிக்கியிருக்கிறது, இதுவரை இருந்திராத வகையில் ஜி ஜின்பிங்குக்கு கட்சியிலும் அரசிலும் அதிகாரங்கள் கிடைத்தாலும் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம்தான் அவருடைய ஆட்சிக் காலம் மதிப்பிடப்படும். இத்தகைய நெருக்கடிகளின் மத்தியில்தான் வெளியாகியிருக்கிறது இந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பு வெளியான நேரமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கட்சியின் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. அந்த மாநாட்டின் முடிவில் கட்சிக்குள் மிகப் பெரிய நிர்வாக மாற்றம் நடக்கும். கட்சியின் மையத் தலைவராக அறிவிக்கப்பட்டுவிட்டதால் இனி உள்கட்சி நிர்வாகிகள் மாற்றங்களில் ஜி ஜின்பிங்குக்கு முக்கியப் பங்கு இருக்கும். உலகம் கவனிக்கும் இன்னொரு சோதனை யுகத்தில் நுழைகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி!

ஜின்பிங்குக்கு கட்சியிலும் அரசிலும் அதிகாரங்கள் கிடைத்தாலும் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம்தான் அவருடைய ஆட்சிக் காலம் மதிப்பிடப்படும். இத்தகைய நெருக்கடிகளின் மத்தியில்தான் வெளியாகியிருக்கிறது இந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பு வெளியான நேரமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கட்சியின் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. அந்த மாநாட்டின் முடிவில் கட்சிக்குள் மிகப் பெரிய நிர்வாக மாற்றம் நடக்கும். கட்சியின் மையத் தலைவராக அறிவிக்கப்பட்டுவிட்டதால் இனி உள்கட்சி நிர்வாகிகள் மாற்றங்களில் ஜி ஜின்பிங்குக்கு முக்கியப் பங்கு இருக்கும். உலகம் கவனிக்கும் இன்னொரு சோதனை யுகத்தில் நுழைகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x