நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச வேண்டும்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச வேண்டும்!
Updated on
1 min read

நாடாளுமன்றம் என்பது அவை நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான இடமோ, தர்ணா செய்வதற்கானகளமோ அல்ல என்று கூறியிருக்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகளிடத்தில் நல்ல ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது; பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு கூர்மையடைந்திருக்கிறது. போதிய முன் தயாரிப்புகள் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், எல்லாத் துறைகளிலும் தவிப்பும் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கின்றன. கள்ளப் பணம், கறுப்புப் பணம் ஆகியவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கையாகவே இருந்திருந்தாலும், மக்களை இது எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை ஆராயாமல் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. முதலில் ஏடிஎம்கள் தயாரானால் பிரச்சினை சுமூகமாகிவிடும் என்றார்கள். அடுத்து, ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு அச்சடிப்பு இயந்திரங்கள் மட்டுமின்றி, அரசு அச்சகங்களும் முழு நேரமும் அச்சிடுகின்றன என்றார்கள். வங்கிகள் மட்டுமல்ல; ஏடிஎம்களும் தயாராகிவிட்டன. அச்சகங்கள் அச்சடிக்கின்றன. ஆனால், ரொக்கம் நிறைந்தபாடில்லை. பணம் எடுப்பதற்காக இரவு முதலே வங்கி முன்னால் படுத்துக்கிடப்பதும், காத்திருந்து காத்திருந்து எடுத்த பணத்தைச் சில்லறை மாற்ற அலைவதும் தேசியத் துயரங்கள் ஆகிவிட்டன.

இந்த அவலங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டிருப்பது நல்ல விஷயம். ஆனால், நாடாளுமன்றத்தில் அதை விவாதிக்க வேண்டும். அவை நடவடிக்கைகளை ஓரளவுக்கு மேல் தொடர்ந்து முடக்குவது சரியல்ல. “முன்னதாக, மன்மோகன் சிங் அரசின் ஆட்சிக் காலகட்டத்தில், பாஜக செய்ததைத்தான் நாங்கள் இப்போது செய்கிறோம்” என்ற வாதம் ஏற்புடையது அல்ல. கறுப்புப் பணத்தை ஒழிக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கை மட்டும் போதாது என்பது பாஜக அரசைக் காட்டிலும் அதிகம் அறிந்தவர்கள் எதிர்க்கட்சி வரிசைகளில் இருக்கும் அனுபவசாலிகள். விவாதத்தில் அந்த யோசனைகளைத் தெரிவித்தால், ஆட்சியாளர்கள் அதைக் கடைப்பிடிக்காவிட்டாலும் மக்கள் கவனிப்பார்கள். செலவு அனுமதிக் கோரிக்கை மசோதா முதல் துணை மானியக் கோரிக்கை வரை முக்கியமான பல மசோதாக்களை இறுதியில் அமளிக்கு இடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் ஆளும் கூட்டணி நிறைவேற்றிக்கொள்வதால் யாருக்கு என்ன லாபம்? எதிர்க்கட்சிகளின் யோசனைகளை ஆளும் கூட்டணி மதிக்காவிட்டாலும், அமல்படுத்தாவிட்டாலும் மக்களிடம் போய்ச் சேரும் வகையிலேனும் அவையில் விவாதிக்க வேண்டும்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கொடும் பாதிப்புகளை அனுபவித்துவரும் மக்கள், அரசு மீது தாங்கொணாத கோபத்தில் இருக்கிறார்கள். நாடு முழுவதும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் அவையில் எதிரொலிக்க வேண்டும். மேலும், இப்படிப்பட்ட தருணத்தில் சொல்லப்படும் ஆலோசனைகள்தான் எதிர் வரிசையில் இருக்கும் தொலைநோக்கு மிக்க தலைவர்களையும் அடையாளம் காட்டும். ஜனநாயக விரோதமாகவும் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு மதிப்பளிக்காததாகவும் இந்த அரசு நடந்துகொண்டாலும்கூட, அதை அவையில் அம்பலப்படுத்த இந்தத் தருணத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீண்ட அவைப் புறக்கணிப்பு மக்களிடம் அதிருப்தியையும் அவநம்பிக்கையையுமே விதைக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in