

தமிழ்நாட்டின் 78% அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் நூற்றுக்கும் குறைவான மாணவர்களே படித்துவருவதாக தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் புள்ளிவிவரம் ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்சேர்க்கை வீதம் கடந்த 20 ஆண்டுகளாகவே தொடர்ந்து குறைந்துவருகிறது. கரோனாவுக்குப் பிறகு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகணிசமாகக் கூடியிருந்தாலும் மேற்கூறிய புள்ளிவிவரம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
வர்க்கப் பாகுபாடின்றி பல தரப்பினரும் தங்கள் பிள்ளைகளை ஒரு காலத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்த்தனர். அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் பலர் இன்று பல துறைகளில் கோலோச்சுகின்றனர். ஆனால், வசதி வாய்ப்புள்ளவர்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள்கூட அரசுப் பள்ளிகளின் பக்கம் செல்வதை இன்று தவிர்க்கிறார்கள். இலவசக் கல்வி தொடங்கிப் பல விலையில்லா திட்டங்களைப் பள்ளிகளில் செயல்படுத்தியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவருகிறதே தவிர, அதிகரிப்பதில்லை.
தமிழ்நாட்டில் 24,310 தொடக்கப் பள்ளிகள், 7,024 நடுநிலைப் பள்ளிகள், 3,135 உயா்நிலைப் பள்ளிகள், 3,110 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 37,579 அரசுப் பள்ளிகள் உள்ளன. தொடக்கப் பள்ளிகள் தொடங்கி மேல்நிலைப் பள்ளிகள்வரை, 8,328 அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தனியாரில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என எல்லாம் சேர்த்தே 12,382 பள்ளிகள்தான் உள்ளன. அரசுப் பள்ளிகளில் 45,93,422 பேரும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 22,25,308 பேரும் படிக்கிறார்கள்.
ஆனால், 12,382 தனியார் பள்ளிகளில் 64,15,398 பேர் படிக்கிறார்கள். அரசுப் பள்ளிகள் மக்களின் முதன்மைத் தெரிவாக இல்லை என்பதை இதிலிருந்து உணரலாம். தனியார் பள்ளி மோகத்தால் பெற்றோர் அப்பள்ளிகளை நாடுவதாகக்கருத முடியாது. தமிழகத்தில் புகழ்பெற்ற சில அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் அலையும் பெற்றோரையும் ஆண்டுதோறும் பார்க்கிறோம். ஆனால், அத்தகைய பள்ளிகள் விதிவிலக்குகளாகவே இருக்கின்றன.
தரமற்ற பள்ளிக் கட்டிடங்கள், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பற்றாக்குறை, தரமான கல்வி கிடைக்காதது போன்றவை அரசுப் பள்ளிகளிலிருந்து பெற்றோர் விலகி நிற்பதற்குக் காரணம். தமிழக பட்ஜெட்டில் மற்ற எந்தத் துறையையும்விட பள்ளிக் கல்வித் துறைக்குத்தான் நிதி அதிகமாக ஒதுக்கப்படுகிறது. 2022-23ஆம் ஆண்டில் ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இத்தொகை பெரும்பாலும் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் ஊதியம், தொடர் செலவினம் ஆகியவற்றுக்கே செலவிடப்படுகிறது. இந்தச்சூழலில் பள்ளி உள்கட்டமைப்பு என்பது கேள்விக்குறியதாக மாறிவிடுகிறது.
அரசுப் பள்ளி வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம் என்கிறது அரசு. இதை அனைத்து வகைகளிலும் அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் என்றால், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும். அதோடு, தரமான கல்வியை வழங்குவதன் மூலம் அரசுப் பள்ளிகளின்பால் மக்களை ஈர்க்க முடியும். அதை முழுமையாக உணர்ந்து அரசு செயல்பட வேண்டிய தருணம் இது.