

மத்திய ரிசர்வ் பாதுகாப்பு வீரர்களை (சிஆர்பிஎஃப்) வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி, ஆர்டர்லி முறையைப் பின்பற்றும் சிஆர்பிஎஃப் உயரதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த முத்து என்கிற சிஆர்பிஎஃப் வீரர், ஆர்டர்லி முறையைப் பின்பற்ற மறுத்ததால், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துப் பணிநீக்கம் செய்த உயரதிகாரிகளின் உத்தரவை ரத்துசெய்த உயர் நீதிமன்றம், அப்படிச் செய்த அதிகாரிகளின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகக் காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட்டில் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. அந்த உத்தரவு சிஆர்பிஎஃப் தொடர்பாகவும் நீண்டிருக்கிறது. மாநில காவல் துறைகள், மத்திய காவல் பணிகள் என வேறுபாடு இல்லாமல், ஆர்டர்லி முறை ஒரு வியாதியாகவே பரவியிருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. காலனிய எச்சங்களில் ஒன்றான ஆர்டர்லி முறை, இந்தியா 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையிலும் தொடர்வது வெட்கத்துக்குரியது.
காவல் உயரதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலைகளைச் செய்யும் கீழ்நிலைக் காவல் ஊழியர்களான ஆர்டர்லிகளுக்கு ஊதியம், மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மக்கள் வரிப்பணம் உயரதிகாரிகளால் வீணடிக்கப்படுவதாகக் கருதவும் இடமுண்டு. இந்திய அரசமைப்பின் கூறு 21, அனைத்துக் குடிமக்களும் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்கிறது.
மனிதர்கள் கண்ணியத்தோடு வாழ்வதற்கான உரிமையையும் அந்தச் சட்டக் கூறு வழங்கியுள்ளது. காவலரை ஆர்டர்லியாகப் பணிபுரிய வற்புறுத்துவது, அவர்களின் கண்ணியத்துக்கு எதிரான நடவடிக்கை என்பதையும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதை உயரதிகாரிகள் நினைவில் கொள்வது அவசியம்.
1980இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ஆர்டர்லி முறையை ஒழிக்க தேசிய காவல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. 2006இல் இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையமும் 2008இல் ஆறாவது ஊதியக் குழுவும் ஆர்டர்லி முறையை ஒழிக்கப் பரிந்துரைத்தன. வெங்கய்ய நாயுடு தலைமையிலான உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் ஆர்டர்லி முறைக்கு எதிராகப் பல கருத்துகளை 2013இல் முன்வைத்ததோடு, அதை ஒழிக்கவும் பரிந்துரைத்தது.
நாட்டில் ஆர்டர்லி பணிமுறை இல்லை என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. ஆனால், இவற்றை எல்லாம் மீறி இந்த வழக்கம் தொடர்வதும், அது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெறுவதும் காவல் உயரதிகாரிகள் சிலர் தமது அதிகார மமதையால் சட்டத்தை மதிக்காமல் இருப்பதன் வெளிப்பாடு.
இனியும் ஆர்டர்லி முறை தொடர்வதை எக்காரணம் கொண்டும் மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. நாடு முழுவதும் நீதிமன்ற உத்தரவுகளை அரசும், அதன் அங்கமாக இருக்கும் அதிகாரிகளும்தான் நிறைவேற்றுகிறார்கள். ஆர்டர்லி விஷயத்தில் காவல் துறை உயரதிகாரிகள் மீதே குற்றச்சாட்டுகள் நீள்வதால், இது தொடர்பாகச் சுதந்திரமான கண்காணிப்புக் குழுவை உருவாக்கி, நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாகச் செயல்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.