

தமிழக பாஜகவின் சிறுபான்மைப் பிரிவின் மாநிலத் தலைவர் டெய்ஸி சரணிடம், அக்கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநிலப் பொதுச் செயலாளர் சூர்யா சிவா, தகாத முறையில் பேசிய ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, இருவரையும் கட்சிப் பணியிலிருந்து ஆறு மாதங்களுக்கு விலக்குவதாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.
அரசியல் களத்தில் பெண்கள் ஒடுக்குதலுக்கும் பாலியல் சீண்டலுக்கும் ஆளாவது இது முதல்முறை அல்ல. செப்டம்பரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவிடம் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி தவறாக நடந்துகொண்ட காணொளி வெளியான பிறகும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பெரும் போராட்டங்களுக்குப் பிறகு அரசியலுக்குள் நுழைகிற பெண்கள் மீதான ஆண்களின் ஆதிக்கமும் பாலியல் சீண்டல்களும் அரசியலில் பெண்களின் இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த பெண்களை மோசமான சொற்களால் இழிவுபடுத்தியிருந்தார். இதைக் கண்டித்து பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அண்ணாமலை பேசியது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது.
‘தமிழகத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், பெண்கள் மீதான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனவும், பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவோரின் நாக்கும் கைகளும் துண்டிக்கப்படும்’ என்றும் ஆவேசத்துடன் கூறியிருந்தார். ஆனால், தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அதேபோன்றதொரு குற்றத்தைச் செய்துள்ளபோது, ஆறு மாத விலக்கம் என்பதுதான் அதிகபட்ச நடவடிக்கையாக இருக்கிறது. கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இதைவிடவும் ‘கடுமையான’ தண்டனையைச் சம்பந்தப்பட்டவருக்கு வழங்கக்கூடும்.
மாநில, தேசிய அளவிலான பிற கட்சிகளும் கட்சிக்குள்ளும் வெளியிலும் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் ஆண் உறுப்பினர்களைக் கண்டுகொள்வதில்லை. பெண்கள் மகளிர் அணியில் மட்டும் இருந்தால் போதுமானது, கட்சியின் தலைமைக் குழுவிலும் பொதுக் குழுவிலும் அவர்களுக்கு இடமளிக்கத் தேவையில்லை என்கிற பிற்போக்குச் சிந்தனை எல்லாக் கட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
இவற்றை மீறி ஒன்றிரண்டு பெண்கள் கட்சியிலோ ஆட்சியிலோ முக்கியப் பொறுப்பில் அமர்ந்துவிட்டால், அவர்களை அக்கட்சியின் ஆண்கள் அணுகும் முறை மோசமானதாகவே இருக்கிறது. பெண்களைச் சபை நடுவே ஒருமையில் அழைப்பது, ‘அவருக்கு எதுவும் தெரியாது’ என்று சொல்வது, மேடை - பொது நிகழ்ச்சி என்று எதுவாக இருந்தாலும் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, கண்ணியக் குறைவாகப் பேசுவது - நடந்துகொள்வது என அநாகரிகங்களை அரங்கேற்ற ஆண்கள் தயங்குவதே இல்லை.
கட்சியின் மேல்மட்டம் வரையில் பெண்களைப் பற்றி வேரூன்றி இருக்கின்ற ஒருவித அலட்சிய மனோபாவம்தான் பல்வேறு மட்டங்களில் உள்ள தலைவர்களிடம் இப்படி அருவருப்பான சொற்களாகவும் செய்கைகளாகவும் வெளிப்படுகின்றன. அவ்வாறு இல்லை என்று கட்சித் தலைமை நிரூபிக்க விரும்பினால், மிகமிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதுதான் அதற்குத் தீர்வாக அமையும்.