

மீண்டும் கொந்தளிப்பில் இருக்கிறது மணிப்பூர். நவம்பர் 1 முதல் மணிப்பூர் பள்ளத்தாக்குக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் போக்குவரத்தைத் தடுத்துவைத்திருக்கிறது, நாகர்கள் தேசிய இயக்கமான ஐக்கிய நாகா கவுன்சில். இதனால், மாநிலத்தின் சகஜநிலை பாதிக்கப்பட்டுள்ளதோடு, உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஒரு கேஸ் சிலிண்டர் ரூ.3,000 வரை கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகச் சொல்கின்றன அங்கிருந்து வரும் தகவல்கள். ஏற்கெனவே பணமதிப்பு நீக்கம் பொருளாதாரத்தை முடக்கியிருக்கும் நிலையில், சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகி யிருக்கின்றனர் மணிப்பூர் மக்கள். விளைவாக, நாகர்கள் வசிக்கும் பகுதிக்கான எதிர்த் தடைகளை உருவாக்கியிருக்கின்றனர் ஏனைய இனக் குழுக்கள்.
புதிய மாவட்டங்களை மாநில முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் அறிவித்ததை எதிர்த்து, இந்த சாலைத் தடைப் போராட்டத்தை நாகர்கள் தொடங்கினர். சேனாபதி மலை மாவட்டத்திலிருந்து குக்கி இன மக்கள் பெரும்பான்மையாக இருக்கிற பகுதிகளைப் பிரித்துத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது குக்கி இன மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தொலைதூரங்களிலிருந்து வரும் மக்களுக்கு மாவட்டத் தலைநகருக்கு வருவதில் உள்ள சிரமங்களை இந்த மாற்றம் குறைக்கும் என்பது. புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பு வெளியானபோது இந்தக் கோரிக்கையை அரசு ஏற்றிருந்தது.
மணிப்பூரில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களைக் கவரும் வகையில் இந்த முடிவை எடுத்தது மணிப்பூரில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் அரசாங்கம். புதிய மாவட்டங்களில் உள்ள மக்கள் - அதாவது நாகர்கள் அல்லாத ஏனைய இனக் குழுக்கள் - இந்த முடிவை வரவேற்கின்றனர். ஆனால், நாகர்களும் ஐக்கிய நாகா கவுன்சிலும் இதற்குக் கடும் எதிர்வினையாற்றிவருகின்றனர். ஏனைய நாகா அமைப்புகளின் ஆதரவும் இதற்கு இருக்கிறது. “நாகா இன மக்கள் வசிக்கும் பகுதிகளைப் பிளவுபடுத்தும் இந்நடவடிக்கை, மத்திய - மாநில அரசுகளோடு நாகா போராளி அமைப்புகளும் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்களின் விதிகளை மீறிய நடவடிக்கை இது” என்பது அவர்களுடைய குற்றச்சாட்டு. இதற்குப் பதிலடியாக, மணிப்பூரிலிருந்து நாகாலாந்துக்குப் பொருட்கள் செல்வதையும், மணிப்பூரிலேயே நாகர்கள் வசிக்கும் பகுதிகளுக்குப் பொருட்கள் செல்வதையும் தடுக்கும் எதிர்ப் போராட்டத்தை ஏனைய இனக் குழுக்கள் நடத்துகின்றன. பல பகுதிகளில் வன்முறையும் வெடித்திருக்கிறது.
நிலைமை கை மீறியுள்ள சூழலில், இந்த விஷயத்தில் மத்திய அரசின் உதவியை மாநில அரசு நாடியது. மணிப்பூர், நாகாலாந்து இரு மாநிலங்களுக்கும் கூடுதல் துணை ராணுவப் படைகளை மத்திய அரசு அனுப்பியிருக்கிறது. எனினும், வெறுமனே படைகளைக் கொண்டு தீர்த்துவிடக் கூடிய பிரச்சினை இதுவல்ல. நாகா குழுக்களோடு மத்திய - மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது தொடர்பில் அவர்களுடைய கவலைகளைக் கரிசனத்தோடு கேட்பதோடு, அவர்களின் சம்மதத்தோடு புதிய மாவட்டங்கள் திட்டத்தைச் சாத்தியமாக்க வேண்டும்!