தலைமைத் தேர்தல் ஆணையரின் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்!

தலைமைத் தேர்தல் ஆணையரின் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்!
Updated on
2 min read

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு வழிவகுக்கக் கோரும் மனுக்களை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக் காலம் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் தேர்தல்களைச் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்காக அரசமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம்பெற்ற அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையம், ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்டது. தேர்தல் ஆணையர்களே பணிமூப்பு அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையராக ஆக்கப்படுகிறார்கள்.

தேர்தல் ஆணையச் சட்டம் 1991இன் படி, தலைமை ஆணையரும் தேர்தல் ஆணையர்களும் அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவடையும்வரை பதவியில் இருக்க முடியும். 2004-க்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையர்கள் அப்பதவியில் இருக்கும் காலம் குறைந்துகொண்டே வருவதாகவும் 65 வயதை நெருங்குகிறவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுவதே இதற்குக் காரணம் என்றும் நீதிபதி கே.எம்.ஜோசப் கூறியிருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளில் எட்டுப் பேர் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோரை உள்ளடக்கிய சுதந்திரமான அமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்தும் இந்த அமர்வு பரிசீலித்துவருகிறது. அதே நேரம், நியமனக் குழுவில் நீதித் துறையின் பிரதிநிதியை உள்ளடக்குவதால் மட்டுமே தேர்தல் ஆணைய நியமனங்கள் நியாயமாக நடைபெறுவதை உறுதிசெய்ய முடியும் என்பது பிழையான பார்வை என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் விருப்பப்படி அல்லாமல், அதிகாரிகளின் பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதாகவும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் தனக்குள்ள அதிகாரத்தை நீதிமன்றத்துடன் பகிர்ந்துகொள்வதில் மத்திய அரசு வெளிப்படுத்தியிருக்கும் தயக்கம் நியாயமானதே. அதே நேரம், தலைமைத் தேர்தல் ஆணையர்களின் பதவிக் காலம் குறித்து நீதிமன்றம் வெளிப்படுத்தியிருக்கும் ஆதங்கம் புறக்கணிக்கத்தக்கதல்ல. இதேபோல் நீதிபதிகள் பணி மூப்பு அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆக முடியும் என்பதால், அவர்களும் குறைந்த காலமே பதவி வகிக்க முடிகிறது. இத்தனைக்கும் நீதிபதிகள் நியமனத்தில் நீதிமன்றத்தின் கொலீஜிய அமைப்பே முழு அதிகாரம் கொண்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் வயது சார்ந்த எந்தத் தடைகளும் இல்லை. ஆனால், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளுக்கு மத்திய அரசால் நியமிக்கப்படுகிறவர்கள் குறைந்த காலமே அப்பதவிகளில் இருக்க முடிகிறது. இது அவர்களின் சுதந்திரத்தைப் பாதிப்பதோடு, சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கான கால எல்லையையும் குறுக்குகிறது என்று நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்வி இந்திய ஜனநாயகத்தின் மீதான அக்கறையின் வெளிப்பாடு. இதை வெறும் அதிகாரப் போட்டியாகப் பார்க்காமல் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் முழுமையான பதவிக் காலத்தைப் பயன்படுத்தவும் அவர்களின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in