Published : 06 Dec 2016 12:58 AM
Last Updated : 06 Dec 2016 12:58 AM

விடைபெற்ற சகாப்தம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டார். இந்தியாவின் ஒப்பற்ற மக்கள் தலைவர்களில் ஒருவர், சம காலத்தில் அவர் அளவுக்கு மக்களால் நேசிக்கப்பட்டவர், கொண்டாடப்பட்டவர் - வழிபடப்பட்டவர் என்றும்கூடச் சொல்லலாம் - எவரும் இல்லை. அவருடைய கட்சியையும் தாண்டி தமிழக மக்களில் ஒரு பெரும் பகுதியினர் அவரை 'அம்மா' என்றே அழைத்தார்கள்; அம்மாவாகவே பார்த்தார்கள். குறிப்பாக, தமிழகப் பெண்களில் பெரும் பகுதியினர் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அவரைப் பெண் சக்தியின் அடையாளமாக வரித்துக்கொண்டார்கள். 'ஒரு மரணம் யாராலும் நிறைக்க முடியாத வெற்றிடத்தை உருவாக்குகிறது' என்ற வார்த்தைகள் ஜெயலலிதாவைப் பொறுத்த அளவில் முழுக்கப் பொருந்தக் கூடியது. 1948, பிப்ரவரி 24 அன்று மைசூர், மாண்டியாவில் பிறந்த ஜெயலலிதா, தன்னுடைய 68-வது வயதில் 2016 டிசம்பர் 5 அன்று விடைபெற்றுக்கொண்டார்.

எந்த ஒரு வரலாற்று ஆய்வாளரையும் வசீகரிக்கக் கூடிய வாழ்க்கை ஜெயலலிதாவினுடையது. கிட்டத்தட்ட திரைப்படங்களுக்கு இணையான ஏற்ற இறக்கங்களையும் துயரங்களையும் சவால்களையும் ஆச்சரியங்களையும் விசித்திரங்களையும் வெற்றிகளையும் தோல்விகளையும் சுவாரசியங்களையும் கொண்டது. பிரத்யேகமானது. இன்றைய கர்நாடகத்தில் பிறந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை, அவருடைய சிறுவயதிலேயே தமிழகத்தோடு பிணைந்தது. சிறு வயதிலேயே தந்தையை இழந்த ஜெயலலிதா, குடும்ப பாரத்தைச் சுமக்கும் நிலையிலிருந்த ஒரு தாயால் வளர்க்கப்பட்டவர். படிப்பிலும் பன்மொழித் திறனிலும் சிறந்து விளங்கியவர், விருப்பமே இல்லாமல்தான் திரைத் துறையில் காலடி எடுத்துவைத்தார். ஆனால், அவர் அளவுக்கு வெற்றிகளைக் குவித்த நடிகை இன்றளவும் தென்னிந்திய சினிமாவில் கிடையாது. அடுத்து, அரசியலிலும் அப்படியே நடந்தது.

திரைத் துறையில் அவருக்குப் பக்க பலமாக இருந்த எம்ஜிஆரின் அதிமுகவில் 1982-ல் உறுப்பினரானார் ஜெயலலிதா. அதே ஆண்டு, அக்கட்சியின் மாநாட்டில் 'பெண்ணின் பெருமை'என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரைக்குக் கிடைத்த வரவேற்பு அடுத்த ஆண்டே அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலர் பதவியில் அவரை அமர்த்தியது. அடுத்த ஆண்டு, மாநிலங்களவை உறுப்பினரானார். 1984 முதல் 1989 வரை அப்பதவியில் இருந்தவரை இடையில் நேரிட்ட எம்ஜிஆரின் மரணம் அடுத்த கட்டம் நோக்கித் தள்ளியது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக உடைந்தது. எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமசந்திரன் தலைமையில் ஒரு அணியும் ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியுமாகப் பிரிந்த கட்சி, அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாகத் தோல்வியைச் சந்தித்தது. தொடர் விளைவாக, ஜானகி அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ள அதிமுக ஜெயலலிதாவின் கைக்குள் முழுமையாக வந்தது. ஜெயலலிதாவையும் அரசியலிலிருந்து விலக்கும் முயற்சிகள் அரசியல் களத்தில் தொடங்கியபோதுதான் விஸ்வரூபம் எடுத்தார் அவர். 1989 மார்ச் 25 அன்று தமிழக சட்டசபையில் நடந்த வரலாறு காணாத வன்முறைச் சம்பவத்துக்குப் பின் பெருத்த அவமானத்தோடு "இனி இந்த அவைக்குள் முதல்வராகத்தான் நுழைவேன்" என்று சபதமிட்டுப் புறப்பட்ட ஜெயலலிதா, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்தச் சபதத்தை நிறைவேற்றினார். தன்னுடைய 43-வது வயதில் 1991-ல் முதல்வராகப் பொறுப்பேற்றபோது அவரே தமிழகத்தின் இளவயது முதல்வர்.

அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் வென்றார், தோற்றார், மீண்டும் வென்றார், மீண்டும் தோற்றார்; ஊழல் வழக்குகளை எதிர்கொண்டார்; சிறை சென்றார்; பதவி விலகினார்; வழக்கில் வென்று மீண்டும் பதவியில் அமர்ந்தார்; தொடர்ந்து வழக்குகளை எதிர்கொண்டார். ஒருவிஷயம், தமிழகத்தின் அரசியலிலிருந்து விலக்க முடியாத பெரும் மக்கள் சக்தியாக அவர் விளங்கினார். 2014 மக்களவைத் தேர்தலில் பெருமளவில் தனித்து நின்று, மாநிலத்தின் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை வென்று நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக மக்களவையில் அதிமுகவை அமர்த்தியது, அவருடைய வெற்றிகளிலேயே மகத்துவமானது. குடும்ப அரசியலுக்கு எதிரானவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஜெயலலிதா தன்னுடைய குடும்ப உறவுகளிடமிருந்து முற்றிலுமாக விலகியே இருந்தார். ஆனால், 'நிழல் அதிகார மையங்கள்' அவருடைய ஆட்சிக் காலம் முழுவதும் நீடித்தன. அவையே கட்சித் தொண்டர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் அவரை விலக்கியும் வைத்தன. தன் வாழ்நாளில் அவர் எதிர்கொண்ட மிகப் பெரிய விமர்சனம் இது. ஆராதனை வழிபாட்டுக் கலாச்சாரத்தில், ஒரு நபர் ராணுவம் எனச் செயல்பட்ட ஜெயலலிதாவுக்கு அந்தப் பலமே பலவீனமாகவும் ஆனது. அதிமுகவில் செயலூக்கம் நிறைந்த தலைவர்கள் பலர் இருந்தாலும், அடுத்த கட்டத்தில் அவருக்கு இணையான ஒருவரை அவர் உருவாக்கிடவோ, மக்களிடத்தில் வழிகாட்டிச் செல்லவோ இல்லை. ஜெயலலிதா நீங்கலாக எவர் ஒருவரையும் தலைமை இடத்தில் பொருத்திப் பார்த்துப் பழக்கமில்லாத அதிமுகவின் அடுத்த கட்டப் பயணம் எப்படி இருக்கும்? அதிமுகவுக்கு அதன் வரலாற்றிலேயே மிகப் பெரிய சவால்கள் இனிதான் தொடங்குகின்றன.

பிறப்பினால் ஒரு பிராமணப் பெண்ணான ஜெயலலிதா, பிராமணர்களுக்கு எதிர் இயக்கமாகத் தோன்றிய திராவிட இயக்கத்தைக் கட்டிக்காக்கும் வலுவான தலைவர்களில் ஒருவராக இருந்தது ஒரு வரலாற்று முரண். தேசியம் என்ற பெயரில் ஒற்றையாட்சியின் கீழ் படிப்படியாக இந்தியாவைக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராகவும் மதவாத அரசியல் தமிழகத்தில் பரவ ஒருவகையில் சவாலாகவும் இருந்தவர் ஜெயலலிதா. தன்னுடைய ஆரம்ப காலத்திலிருந்து கடைசிக் காலம் வரை மாநிலங்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தவர். அந்த வகையில், இந்தியாவின் பன்மைத்துவத்துக்குத் தொடர்ந்து பங்களித்துவந்தவர். வெகுஜனத் திட்டங்கள் என்ற பெயரில் மேட்டிமைவாதிகளால் கிண்டல் அடிக்கப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களைத் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு அறிமுகப்படுத்திய சமூகநல அரசியலில் ஜெயலலிதாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. தொட்டில் குழந்தைகள் திட்டம் முதல் நகர்ப்புறச் சலுகை விலை அரசு உணவகங்கள், மருந்தகங்கள், மாணவர்களுக்கான மடிக்கணினிகள், ஏழைகளுக்கான கால்நடைகள் திட்டம் வரை பல திட்டங்கள் புரட்சிகரமானவை. இன்றைக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இந்தத் திட்டங்கள் பிரதியெடுக்கப்படுவது அவருடைய அரசியலின் முக்கியத்துவத்தைச் சொல்லக் கூடியது.

தமிழகத்துக்கு இது பேரிழப்பு. சவாலான இந்தக் காலகட்டத்தையும் நம் மாநிலம் கடந்து வரத்தான் வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x