

தேசபக்தி என்பது, கண்கூடாகப் பிரதிபலிக்கும் வகையில் காட்டிக்கொள்ளும் அவசியம் இல்லாம லேயே பலரால் கொண்டாடப்படும் ஒரு விழுமியம். துரதிர்ஷ்டவசமாக, அடிக்கடி வெளிப்படுத்த வேண்டிய ஒன்றாக, பொதுவெளியில் காட்டிக்கொள்ள வேண்டிய ஒன்றாக, அதை செய்யத் தவறுபவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் கட்டாயப்படுத்தப்படும் ஒன்றாக தேசபக்தியைக் கருதும் போக்கு சமீபத்தில் உருவாகியிருக்கிறது. ‘திரையரங்குகளில் காட்சிகள் தொடங்குவதற்கு முன்னர் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் உத்தரவுக்குப் பின்னர் இருக்கும் நியாயம் என்னவென்று தெளிவாகப் புரியவில்லை.
வேற்றுமைகளுக்கு இடையில் ஒற்றுமையை வெளிப் படுத்தும் உணர்ச்சிகரமான, உயர்வான தேசிய கீதம் நம்முடையது. தேசிய கீதம் தவறாகப் பயன்படுத்தப்படுவதும், வேண்டும் என்றே தேசிய கீதத்தை அவமதிப்பதும் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களால் வருத்தமடைபவர்கள் சட்டரீதியாக அது தொடர்பாகப் புகார் அளிக்கவும் இடம் இருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி, இந்தியா போன்ற முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாட்டில், நீதித் துறையின் உத்தரவின்பேரில் தேசிய கீதத்தைப் பாடச் சொல்லி, அல்லது ஒலிக்கவிடச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது அவசியமே இல்லாதது.
சிறப்பு நிகழ்ச்சிகளின்போது குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளில் தேசிய கீதத்தைப் பாடுவது என்பது அன்றாட வாழ்வின் அனைத்து விஷயங்களையும்விட தேசிய கீதம் மிக முக்கியமானது என்பதை உணர்த்தப் போதுமானது. தேசிய கீதம் இசைக்கப்படும்போது கடைப்பிடிக்க வேண்டியவை தொடர்பாகத் தெளிவான விதிமுறைகள் உண்டு.
மேலும், தேசிய கீதம் கட்டாயம் ஒலிக்கப்பட வேண்டிய இடமாகத் திரையரங்கத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது ஏன் என்றும் புரியவில்லை. சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை தேசிய கீதத்தை ஒலிக்கவிட வேண்டும் என்று திரையரங்குகள் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தன என்பது வேண்டுமானால் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். திரைப்படக் காட்சி முடிந்து, தேசிய கீதம் ஒலித்துக்கொண்டிருக்கும்போதே, பலர் திரையரங்கை விட்டு வெளியேறுவது வழக்கமாகிப்போனதாலேயே இந்த வழக்கம் கைவிடப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது.
தேசிய கீதத்தை வணிகரீதியிலாகத் துஷ்பிரயோகம் செய்வது, அதைப் போலியாகப் பயன்படுத்துவது போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்ட பொதுநல வழக்கு ஒன்றை வைத்து, பொத்தாம்பொதுவான இடைக்கால உத்தரவைப் பிறப்பிப்பது அவசியமற்றது. ‘அரசியல் சட்டரீதியிலான தேசபக்தி’ என்று தனது உத்தரவில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதும் ஆச்சரியம் தருகிறது. அரசியல் சட்டத்தில் அடிப்படையாக இருக்கும் விழுமியங்களுக்கு விசுவாசமாக இருப்பது என்பதுதான் இதற்கு அர்த்தமாக இருக்க முடியும். நீதித் துறையின் ஆணையின் மூலமாகக் கட்டாயப்படுத்துவதோ, அல்லது தேசபக்தி காட்டப்பட வேண்டிய களமாகத் திரையரங்குகளை முன்வைப்பதோ அல்ல!