

சாலைப் போக்குவரத்து விபத்துகளால் உயிரிழந்தவர்களை, கடுமையாகக் காயமடைந்தவர்களை நினைவு கூருவதற்கான சர்வதேச நாள் (ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மூன்றாம் ஞாயிறு), நவம்பர் 20 அன்று சென்னையில் பெருநகரக் காவல் துறையின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
இவ்விழாவில் பேசிய சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்த மனப்போக்கை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். சாலை விதிகள் மக்களின் அன்றாட வாழ்வுக்கும் சாலையைப் பயன்படுத்துவதற்குமான சுமையாகக் கருதப்படும் மனநிலை தீவிரமடைந்திருக்கும் சூழலில், காவல் ஆணையரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2021இல் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் 15,384 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு, இந்தியப் பெருநகரங்களில் சாலை விபத்து மரணங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்னை முதலிடம் வகிக்கிறது. 53 நகரங்களில் நிகழ்ந்த 55,400 வாகனம் மோதிய விபத்துகளில் 5,000 சென்னைப் பெருநகர எல்லைக்குள் நிகழ்ந்தவை. 93% விபத்துகளுக்கு வாகனங்களை, குறிப்பாக இருசக்கர வாகனங்களை அளவுகடந்த வேகத்திலும் விதிகளை மீறி ஆபத்து விளைவிக்கும் வகையிலும் ஓட்டுவதே காரணம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விபத்துகளுக்கும் விபத்து மரணங்களுக்கும் முதன்மையாகப் பங்களிப்பது, பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததுதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட், கார் ஓட்டிகளும் முன்னிருக்கையில் பயணிக்கிறவர்களும் சீட் பெல்ட் அணிவதைக் கட்டாயமாக்குவது போன்ற எளிமையான விதிகள்கூடத் தேவையற்ற சுமையாகப் பார்க்கப்படும் போக்கு அதிகரித்துவருகிறது.
விபத்துகளில் தலையில் காயம்படுவதற்கான சாத்தியத்தை 50-70%, உயிரிழப்புக்கான சாத்தியத்தை ஓட்டுநருக்கு 43%, பின்னால் அமர்ந்து பயணிப்பவருக்கு 58% ஹெல்மெட் அணிவது குறைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கார்களில் ஓட்டுநரும் முன்னிருக்கைப் பயணியும் சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கை ஒலி ஒலித்துக்கொண்டே இருப்பதுபோல் கார்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
கார்களில் சீட் பெல்ட்டின் முக்கியத்துவத்தை உற்பத்தியாளர்கள் உணர்ந்திருந்தாலும், பயனர்கள் சீட் பெல்ட் அணியாமலேயே எச்சரிக்கை ஒலியை நிறுத்துவதற்கான குறுக்குவழிகளைப் பின்பற்றுவதைப் பார்க்கமுடிகிறது. அதேபோல் சிக்னல் விளக்குகள், ‘நோ என்ட்ரி’, ‘ஒன்வே’ போன்ற விதிகளையும் பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்துக் காவலர் இருந்தால் மட்டுமே பின்பற்றுவதைக் காணமுடிகிறது.
சூழல் இப்படி இருக்கையில், அண்மையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டபோது, அது மிகவும் அநீதியான நடவடிக்கை என்பதுபோல் சில ஊடகங்களும் சித்தரித்தது மிகவும் தவறான அணுகுமுறை. சாலைகளின் பராமரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் அரசை விமர்சிக்கும் அதே நேரம், ஒவ்வொருவரும் தமது பாதுகாப்புக்குத் தாங்களே முதன்மைப் பொறுப்பு என்பதை உணர்ந்து, பாதுகாப்பு விதிகளை முறையாகவும் முழுமையாகவும் பின்பற்றினாலே விபத்துகளையும் உயிரிழப்புகளையும் பெருமளவுக்குக் குறைத்துவிட முடியும்.