அரசு நூலகங்கள்: பயன்பாடும் பராமரிப்பும் மேம்படுவது அவசியம்!

அரசு நூலகங்கள்: பயன்பாடும் பராமரிப்பும் மேம்படுவது அவசியம்!
Updated on
1 min read

முதியோர், மாற்றுத்திறனாளிகள், பிற காரணங்களால் நூலகங்களுக்கு வந்து நூல்களைப் படிக்க இயலாதவர்களுக்கு வீடுகளுக்கே சென்று நூல்களை வழங்கும் ‘நூலக நண்பர்கள்’ திட்டம், டிசம்பர் 1 அன்று சென்னையில் தொடங்கப்படும் என்று சென்னை மாவட்ட நூலக அலுவலர் ச.இளங்கோ சந்திரகுமார் தெரிவித்துள்ளார். வாசிப்புப் பழக்கத்தைப் பரவலாக்குவதில் தமிழ்நாடு அரசின் மற்றுமொரு முக்கியமான முன்னெடுப்பு இது.

தமிழகத்தில் 4,600-க்கும் அதிகமான அரசு நூலகங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினராலும் பயன்படுத்தப்படுவதில்லை. 2020இலிருந்து கரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகள் காரணமாக, நூலகங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய்ப் பரவல் ஆபத்து காரணமாக முதியவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால், நூலகங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்தது. இந்தப் பின்னணியில் நூலகப் பயன்பாட்டையும் வாசிப்புப் பழக்கத்தையும் அதிகரிப்பதற்கு ‘நூலக நண்பர்கள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று, 2022-23 பட்ஜெட் கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

முதல் கட்டமாக, தமிழ்நாட்டின் 31 மாவட்ட மைய நூலகங்கள், 300 முழுநேரக் கிளை நூலகங்கள், 706 கிராமப்புற நூலகங்கள், 1,463 பிற நூலகங்கள் என 2,500 நூலகங்களில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு நூலகத்துக்கும் தலா ஐந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு அடையாள அட்டை, நூல்களைக் கொண்டுசெல்வதற்கான பை ஆகியவை வழங்கப்படும்.

அவர்கள் வீடுகளுக்குச் சென்று நூலக நூல்களை விநியோகிப்பார்கள். விநியோகித்த நூல்களை மீண்டும் கொண்டுவந்து நூலகத்தில் சேர்ப்பார்கள். நூலக உறுப்பினர் அல்லாதவர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியையும் இவர்கள் மேற்கொள்வார்கள். சிறப்பாகச் செயல்படும் தன்னார்வலர்கள் ஒவ்வோர் ஆண்டும் நூலக வார விழாவில் பரிசு வழங்கிக் கெளரவிக்கப்படுவார்கள்.

நூலக நூல் வாசிப்பை அதிகரிப்பதற்கான இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கது. அதேபோல் நூலகங்களின் பராமரிப்பிலும் உரிய அக்கறை செலுத்தப்பட வேண்டும். புதிய நூலகங்கள் கட்டப்படுவதற்கு இணையாக, இருக்கும் நூலகங்களைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். புகழ்பெற்ற, பெரிய நூலகங்கள் மட்டுமல்லாமல் அனைத்து நூலகங்களிலும் அனைத்துத் துறை நூல்களும் கிடைப்பதும் அந்தந்தத் துறைகளில் புதிதாக வெளியாகும் நூல்கள் உடனுக்குடன் வாங்கி வைக்கப்படுவதும் உறுதிசெய்யப்பட வேண்டும்.

ஏனென்றால், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் பலருக்கு நூலகங்களே அடிப்படையாக உள்ளன. நூலகத்துக்கு வரும் வாசகர்கள் கேட்கும் நூல்களை உடனடியாகத் தேடி எடுத்துக் கொடுக்கும் திறன் படைத்த நூலகர்களும் அனைத்து நூலகங்களிலும் இருக்க வேண்டும். நூலகங்களில் அமர்ந்து வாசிப்பதற்கான இருக்கைகள், மேசைகள், ஒளி அமைப்பு, காற்றோட்டம், தூய்மையான குடிநீர், கழிப்பறை வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் அவை முறையாகப் பராமரிக்கப்படுவதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

வாசிப்புப் பழக்கத்தை அதிகரிப்பதற்கான தமிழக அரசின் முயற்சிகளுக்கு நூலகங்களின் பராமரிப்பும் மேம்பாடும் மிகப் பெரிய அளவில் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in