

கொலீஜிய அமைப்பு மீண்டும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாகக் கூறி உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்குத் தன் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது. இப்போது நடைமுறையில் உள்ள இந்தக் கொலீஜிய அமைப்பு இந்திய அரசமைப்பில் இல்லை. மாறாக, சட்டக் கூறுகள் 124, 217 உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நியமனம் குறித்தும் குடியரசுத் தலைவர் ஆலோசித்து நீதிபதிகளை நியமிக்கலாம் எனவும் கூறுகின்றன.
1970-களுக்குப் பிறகு நீதிபதிகள் நியமனத்தில் ஆளும் அரசுகள் சார்புநிலையை உருவாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது ஏற்கெனவே உள்ள நியமன முறையை விமர்சனத்துக்கும் உள்ளாக்கியது. 1981இல் ‘எஸ்.பி.குப்தா எதிர் இந்திய ஒன்றியம்’ வழக்கில் உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதி வழங்கும் ஆலோசனையை ஏற்கும், நிராகரிக்கும் உரிமை அரசுக்கு உள்ளதாகக் கூறியது; இது ‘முதலாம் நீதிபதி வழக்கு’ என அழைக்கப்படுகிறது. இந்திய ஒன்றியத்துக்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கின் வழிதான் கொலீஜியம் முறை உருவானது; இது ‘இரண்டாம் நீதிபதி வழக்கு’ என அழைக்கப்படுகிறது. இது நீதிபதி நியமனத்தில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அரசுக்குப் பரிந்துரைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
1998இல் ‘மூன்றாம் நீதிபதி வழக்’கில் நீதிபதிகள் நியமனம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியினதாக மட்டும் இல்லாமல், பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தாக இருக்க வேண்டும் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் நான்கு நீதிபதிகள் அடங்கிய குழு, உச்ச நீதிமன்றத்துக்கான கொலீஜியமாகவும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய குழு உயர் நீதிமன்றத்துக்கான கொலீஜியமாகவும் அமைந்துள்ளது.
கொலீஜியம் முறைமீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சில ஆண்டுகளுக்குமுன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், இதில் சாதிய மனப்பான்மை (casteism) இருப்பதாகக் குற்றம்சாட்டினார். அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரங்நாத் பாண்டே சொந்தபந்தங்களுக்கு முன்னுரிமை கொடுப்படுவதாகக் (nepotism) குற்றம்சாட்டினார். 1993-க்கு முந்தைய நியமன முறை அரசியல் சார்புக்காக விமர்சிக்கப்பட்டதுபோல் கொலீஜிய முறையும் வெளிப்படத்தன்மை இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களுக்காக விமர்சனத்துக்கு உள்ளாகிறது. இந்த இரண்டுக்கும் மாற்றாக 2014இல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இயற்றப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
உச்ச நீதிமன்றம் கொலீஜிய முறையை மறுபரிசீலனை செய்யக் கோரும் ரிட் மனுவைத் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது; இது சாதகமான அம்சம். நீதிபதிகள் நியமன முறையில் அரசுக்கும் நீதித் துறைக்கும் உள்ள முரண்பாட்டால் நீதிபதி நியமனம் தாமதமாகி, நாட்டின் நீதியை நிலைநாட்டுவதில் உள்ள சுணக்கமும் பெருகிவருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இரு தரப்பும் இணக்கமான அணுகுமுறையைப்
பின்பற்ற வேண்டும்.