

தலைநகர் டெல்லியிலும் இதர ஒன்பது மாநிலங்களிலும் உள்ள சிறைகளில் அவற்றின் கொள்ளளவைவிட 150% அளவுக்கு அதிகமாகச் சிறைவாசிகள் இருக்கின்றனர் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்துச் சிறைகளிலும் சராசரியாக 117.4%-க்கு சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்கின்றன 2014 புள்ளிவிவரங்கள்.
நம் நாட்டின் பெரும்பாலான சிறைகள் நிரம்பி வழிவது நீண்ட காலப் பிரச்சினை. உச்ச நீதிமன்றம் சிறைகளின் சீர்திருத்தங்கள் பற்றி பலமுறை பேசியிருக்கிறது. சிறைகளில் உள்ள இடநெருக்கடியையும் அது சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால், இதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் உருப்படியாக நடந்தபாடில்லை. சிறைகளில் உள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நீதிபதிகள் கடந்த பிப்ரவரி 5, மே 6 தேதிகளில் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்கள். சிறைகளில் நெருக்கடியைக் குறைத்து, உள்கட்டுமானங்களை அதிகரித்து ஒவ்வொரு சிறைவாசிக்கும் கூடுதல் இடம் அளிக்க வேண்டும் என்று ஐந்து மாதங்களுக்கு முன்னால் நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், அதன் மீது எந்தவொரு மாநிலமோ, யூனியன் பிரதேசமோ நடவடிக்கை எடுக்கவில்லை.
கூடுதல் சிறைகளைக் கட்டுதல் தொடர்பான முன்மொழிவுகள் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டன. ஆனால், அவை வெற்று முன்மொழிவுகளாக இருக்கின்றன என்றது நீதிமன்றம். அவற்றை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவும் அதில் இல்லை. எங்கிருந்து அவற்றுக்குத் தேவையான பொருளாதார உதவிகள் வரும் என்பதும் குறிப்பிடவில்லை. மாநில அரசுகள், சட்டம் ஒழுங் கைப் பராமரிக்கும் அரசு இயந்திரத்தைச் செயலாற்றலுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், சிறையில் அடைக்கப்படுபவர் களுக்குப் போதுமான இடமும் தேவைகளும் கிடைக்கச் செய்ய வேண்டும்; இதை மாநில அரசுகள் அலட்சியப்படுத்துவதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டிவருகிறது உச்ச நீதிமன்றம்.
இந்தியாவில் சிறைகளில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பகுதிக்கும் மேலானோர் விசாரணைக் கைதிகள் என்பது கடந்த ஆண்டு தெரியவந்தது. இதற்குக் காரணங்களில் வறுமைக்குப் பிரதான இடம் உண்டு. பெரும்பாலான சிறைவாசிகளுக்கு உரிய வழக்கறிஞர்களை வைத்து வழக்காடவோ, பிணையில் வெளியே வரச் செலவழிக்கவோ வசதி இல்லை. விசாரணைக் கைதிகள் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள குற்றங்களுக்குத் தண்டனையாகக் கிடைக்கக்கூடிய சிறைத் தண்டனையில் பாதியளவு காலம் சிறையில் இருந்துவிட்டால் அவர்களைச் சொந்தப் பிணையிலேயே விடுவித்துவிடலாம் என்கிறது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 436-ஏ பிரிவு. இதைப் பயன்படுத்தலாம் என்ற வாதமும் இரண்டு ஆண்டுகளாக நடக்கவே செய்கிறது. ஆனால், நிரம்பி வழியும் சிறைகளைச் சரிப்படுத்த அது மட்டும் போதாது. செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேல் ‘சிறைக்குள் ஒருவர் நுழைந்து விட்டாலே அவர் குற்றவாளி; சிறைகளுக்குள் இருப்பவர்கள் தண்டனைகளுக்கும் எல்லா வகையான அவதிகளுக்கும் உரியவர்கள்’ எனும் மனோபாவம் நம்முடைய பொதுப் புத்தியில் உறைந்திருக்கிறது. அது மாறாத வரை சிறைவாசிகள் பிரச்சினை நான்கு சுவர்களுக்குள் விவாதிக்கப்பட்டு புதைபடுவதாகவே இருக்கும்!