

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து விபத்துகளால் தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்வது மிகவும் கவலைக்குரியது. நவம்பர் 13ஆம் தேதி இரவு சென்னையில் மட்டும் பேருந்து விபத்துக்கு இரண்டு பேர் பலியாகி உள்ளனர். குன்றத்தூர் பணிமனையில், நிறுத்துவதற்காகப் பின்னோக்கி ஓட்டிவரப்பட்ட பேருந்து மோதியதில் பணிமனையின் பாதுகாப்பு ஊழியர் உயிரிழந்தார். வடபழனியில் பேருந்து ஒன்று பின்னாலிருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தவர் உயிரிழந்தார்.
பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு, சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 12ஆம் வகுப்பு மாணவி இதேபோல் உயிரிழந்தார். இப்படிப் பின்னால் வந்துகொண்டிருந்த பேருந்து மோதி, உயிரிழந்த வாகன ஓட்டிகள், நடந்து சென்றவர்கள் குறித்த தரவுகள் முறையாகப் பராமரிக்கப்படுவதாகக்கூடத் தெரியவில்லை. இது தவிர, பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை மீது பேருந்துகள் மோதி, அதனால் பேருந்துக்குக் காத்திருக்கும் பயணிகள் உயிரிழக்கும் பரிதாப நிகழ்வுகளும் செய்திகளில் பதிவாகியுள்ளன.
பேருந்து விபத்துகள் குறித்தும் அவற்றைத் தவிர்ப்பது குறித்தும் போதுமான விவாதங்கள் நடப்பதே இல்லை. அப்படியே நடந்தாலும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் முன்னிறுத்தப்படுகின்றன. ஆள் பற்றாக்குறை அல்லது குறைந்த ஊதியம் காரணமாக ஓட்டுநர்கள் தொடர்ந்து பல மணி நேரம் ஓய்வின்றிப் பேருந்து ஓட்ட நிர்ப்பந்திக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதோடு பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி பேருந்து ஓட்டுநர்களின் அவசரமும் அலட்சியமும் கவனக்குறைவும் பேருந்து விபத்துகளுக்குப் பெரிதும் பங்களிக்கின்றன.
சாலை விதிகளை மதிக்காமலும் அதிவேகமாகவும் அரசுப் பேருந்துகள் ஓட்டப்படுவதை அன்றாடம் காண முடிகிறது. இதுபோன்ற விபத்துகளில் உயிரிழப்புகள் நேரும்போது பல ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிடுகிறார்கள். சாலைகளில் தமது விதிமீறலைக் கேள்விகேட்கும் பயணியர் அல்லது சக வாகன ஓட்டிகளிடம் கடுமையாகச் சண்டையிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். எத்தகைய தவறு செய்தாலும் தமக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்னும் துணிச்சலின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. ஓட்டுநர்கள் இவ்வளவு அலட்சியத்துடன் செயல்பட்டுவிட்டு விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் பணிச்சூழலைக் காரணம் சொல்லித் தப்பிக்க முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஆனால், ஓட்டுநர்கள்மீது பழி சுமத்திவிட்டு போக்குவரத்துக் கழகமும் அரசும் இந்த விபத்துகளுக்கான பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட முடியாது. பேருந்துகளின் சரியான பராமரிப்பு, மிகவும் பழுதடைந்து, தகுதியிழந்துவிட்ட பேருந்துகளைப் பயன்பாட்டிலிருந்து நீக்குதல், பேருந்துகளின் பராமரிப்புக்கும் புதிய பேருந்துகளை வாங்குவதற்கும் உடனுக்குடன் போதுமான நிதி ஒதுக்குவது, இந்தச் செயல்பாடுகள் எந்தத் தாமதமும் இன்றி உரிய நேரத்தில் முடிக்கப்படுதல் எனப் பல விஷயங்களை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஓட்டுநர்களுக்குக் கனிவான பணிச்சூழலை உருவாக்குவது, உரிய ஊதியம் அளிப்பது, தேவைப்பட்டால் உளவியல் ஆலோசனைகள் வழங்குவது எனப் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பேருந்து விபத்துகளைத் தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்க ஒரு நிபுணர் குழு அமைப்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்.