

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிகுமார் - உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, மருத்துவர்களின் அலட்சியத்தால் பலியான சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. 17 வயதான பிரியா, சென்னை ராணி மேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பிரிவில் முதலாமாண்டு படித்துவந்தார். கால்பந்தாட்ட வீராங்கனையான அவர், வலது காலில் வலி ஏற்பட்டதால் கொளத்தூர் பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். நவம்பர் 7 அன்று அவருக்குக் கால் மூட்டுச் சவ்வை சீராக்கும் அறுவைசிகிச்சை நடைபெற்றது.
சிகிச்சைக்குப் பிறகு பிரியாவுக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்கள் சேதமடைந்ததால், அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக மாற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அங்கே அவருக்கு வலது கால் நீக்கப்பட்ட நிலையில், சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்குத் தொடர்ச்சியாக டயாலிசிஸ் செய்யப்பட்டுவந்த நிலையில், இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு மரணம் நிகழ்ந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் நகர் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று பிரியாவின் பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு விளக்கமளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அறுவைசிகிச்சையில் எந்தத் தவறும் நடைபெறவில்லை.
முந்தைய மருத்துவர்களின் கவனக் குறைவுதான் இதற்குக் காரணம்” எனவும், பிரியாவின் தந்தையிடம், “தெரியாமல் நடந்துவிட்டது, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறியுள்ளார். மேலும், இதை அரசியலாக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
கல்லூரி மாணவி ஒருவரின் இறப்பை, ‘கவனக் குறைவு, தெரியாமல் நடந்துவிட்டது’ என்று அமைச்சர் கூறுவதுபோல் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. விவகாரம் பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட பிறகு ஏற்கெனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம் சங்கர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அறுவைசிகிச்சையின்போது ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தக் கட்டப்படும் கட்டு இறுக்கமாக இருந்ததே பிரியாவின் உயிர் பறிபோகக் காரணமாக அமைந்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் சிறு பிசகுகூட சிகிச்சை பெறுபவரின் உயிருக்கே ஆபத்தாக அமையக்கூடும் என்பதை அறிந்திருந்தும்கூட மருத்துவர்கள் இப்படிச் செயல்பட்டிருப்பது பெரும் வேதனை.
மருத்துவர்களின் அலட்சியத்தாலும் கவனக்குறைவாலும் சிலர் இறக்கும்போதெல்லாம் பணியிடை நீக்கம், சட்டரீதியான நடவடிக்கை என்பன போன்ற அந்த நேரத்துக்கான, உறுதியற்ற நடவடிக்கைகளைவிட, நீண்டகாலத் தீர்வை நோக்கிய செயல்பாடுகளே முக்கியத் தேவை.
மருத்துவர்களைக் குற்றம்சாட்டும் அதே நேரம், அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு அறுவைசிகிச்சை நிபுணர்களும் மருத்துவ உதவியாளர்களும் இருக்கிறார்களா, உலக சுகாதார நிறுவனத்தின் நெறிமுறைகளின்படி அறுவைசிகிச்சை மையங்கள் செயல்படுகின்றனவா என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மருத்துவக் கட்டமைப்பில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு, தன்னைச் சீராய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் உணர்த்தியுள்ளது.