

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்கான சதித் திட்டத்தில் பங்குபெற்ற குற்றத்துக்காக 31 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தால் நவம்பர் 11 அன்று விடுவிக்கப்பட்டனர்.
தன்னுடைய சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பேரறிவாளனின் விடுதலைக்கு மே 18 அன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இப்போது அந்தப் பயனை அதே வழக்கில் தண்டிக்கப்பட்ட பிறருக்கும் அளித்துள்ளது. இந்திய நீதி அமைப்பு மனிதாபிமானத்தையும் சீர்திருத்தப் பார்வையையும் முதன்மைப்படுத்துகிறது என்பதற்கான மற்றுமொரு சான்று இது.
அதே நேரம், ஆளுநருக்கு அரசமைப்பு வழங்கியுள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரத்தின் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் இந்த ஏழு பேரும் விடுவிக்கப்பட்டிருப்பது, அவர்கள் குற்றவாளிகள் என்பதை எந்த வகையிலும் மாற்றிவிடாது.
இதை மறந்து விடுவிக்கப்பட்டுள்ள ஆறு பேரில் சிலர் அப்பாவிகள்போல் ஊடகங்களில் பேசுவதும் அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் சிலர் அவர்களை நேரில் சந்திப்பதும் இனிப்புகளை வழங்குவதும் எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. ராஜிவ் காந்தி குடும்பத்தினர், தொண்டர்கள், அவருடன் உயிரிழந்த பாதுகாப்புக் காவலர்களை உள்ளடக்கிய 14 அப்பாவிகளின் குடும்பத்தினர், உறவினர்களின் வேதனையை இது மேலும் அதிகரிக்கும்.
தற்கொலைத் தாக்குதலின் மூலம் ராஜிவ் கொல்லப்பட்டிருந்தாலும் அவரது கொலைக்குத் திட்டமிட்டதும் அரங்கேற்றியதும் இலங்கையில் தமிழீழத்துக்கான கோரிக்கையுடன் வன்முறைப் பாதையில் போரிட்டுவந்த விடுதலைப் புலிகள் அமைப்புதான் என்பதும் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்திய தாணு புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் உடனடியாக உறுதிசெய்யப்பட்டுவிட்டது.
ஆனால், இந்தச் சதித் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட புலிகள் அமைப்பின் சிவராசனும் அவருடைய கூட்டாளிகள் சுபா உள்ளிட்ட ஆறு பேரும் பெங்களூரு புறநகர்ப் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் சுற்றிவளைக்கப்பட்டபோது தற்கொலை செய்துகொண்டனர்.
அவர்களை ஏன் உயிருடன் பிடிக்க முடியவில்லை என்கிற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதேபோல் ராஜிவ் தமிழ்நாட்டுக்கு வந்தால், அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதையும் தாண்டி அவர் தமிழகம் வந்ததும் அவர் கொல்லப்பட்டதிலும் வெளிப்பட்ட உளவுத் துறை, பாதுகாப்பு ஏற்பாடுகளின் தோல்விக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை; அன்றைக்குத் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களில் யாரும் பதவி விலகவும் இல்லை.
வெளிநாட்டில் இயங்கிவந்த ஒரு அமைப்பு, இந்திய மண்ணில் அதன் முன்னாள் பிரதமரைக் கொன்ற வழக்கில் எழுவர் மட்டுமே தண்டிக்கப்பட்டு, அவர்களும் விடுவிக்கப்படுவது அதன் பின்னால் இயங்கிய சதித் திட்டத்துக்கும் அதை அரங்கேற்றியவர்களுக்கும் அவர்களை இயக்கிய சிந்தாந்தத்துக்கும் எந்த வகையிலும் உரிய பதிலடி அல்ல.
எழுவர் விடுவிக்கப்பட்டிருப்பது, இனி இந்தியாவில் இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்தலாம் என்று திட்டமிடும் துணிச்சலை யாருக்கும் கொடுத்துவிடக் கூடாது. அதை உறுதிசெய்வது இந்திய அரசின் தலையாய கடமை.