

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா, தனியார் திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தன் மூன்று வயது மகனைக் கைகளில் ஏந்தியபடி உரையாற்றியது ‘குழந்தைப் பராமரிப்பு’ தொடர்பான விவாதத்தைத் தொடங்கிவைத்துள்ளது. ஆட்சியர் போன்ற அரசு உயர்பதவியில் இருப்பவர் அலுவல்ரீதியான நிகழ்ச்சிக்கு மகனை அழைத்துவந்தது தவறு என்றும், ஆட்சியராக இருந்தபோதும் ஒரு தாயாகக் கடமையாற்றியதில் தவறில்லை என்றும் சமூக வலைதளங்களில் இருவேறு கருத்துகள் பதிவிடப்பட்டன.
இந்தியக் குடும்பங்களில் குழந்தை வளர்ப்பு என்பது முழுக்கவும் பெண்ணைச் சார்ந்தது என்றே கற்பிக்கப்பட்டுள்ளது. பாலூட்டுவது தவிர்த்த மற்ற எல்லாப் பணிகளையும் கணவரும் வீட்டாரும் பகிர்ந்துகொள்ளலாம் என்கிற நிலையில், அனைத்துமே பெண்கள்மீது சுமத்தப்படுவது பாரபட்சமானது. குழந்தைப் பராமரிப்பில் கணவரின் உதவியைக் கோரும் பெண்கள், ‘தாய்மை’ என்கிற புனிதத்தை மீறிவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுவதும் இங்கே நிகழ்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் பெண்கள் தங்கள் பணியிடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
அரசுப் பணியில் இருக்கும் பெண் தம் குழந்தையைப் பணியிடத்துக்கோ தான் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கோ அழைத்துவருவது இது முதல் முறை அல்ல; நாடாளுமன்றம் தொடங்கி ஐ.நா. அவை வரை தங்கள் கைக்குழந்தைகளை அழைத்துவந்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன், ஆஸ்திரேலிய அமைச்சர் லாரிஸா வாட்டர்ஸ், இத்தாலிய அரசியல்வாதி லீச்சா ரோன்சுல்லி, அர்ஜென்டினா எம்.பி. விக்டோரியா டோன்டா, இந்தியாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சௌமியா என உலகம் முழுக்கப் பல உதாரணங்களைக் காட்ட முடியும். இந்த நிலை உயர் பதவிகளில் இருப்பவர்களுக்குத்தான் என்றில்லை. குழந்தையைத் தன்னுடன் சேர்த்தணைத்துக் கட்டியபடி உணவை விநியோகித்த பெண் ஒருவரின் வீடியோ சில மாதங்களுக்கு முன் பரவலாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண் குறித்து அனுதாபத்துடன் பலரும் கருத்துகளைப் பதிவிட்டனர். இந்தப் பின்னணியில், ‘பெண்களுக்குத் தேவை நம் அனுதாபம் அல்ல; அவர்கள் பணி செய்ய உகந்த சூழல்’ என்று ஆட்சியர் திவ்யாவின் கணவர் சபரிநாதன் தெரிவித்த கருத்து கவனத்துக்குரியது.
பணியிடங்களில் ‘குழந்தைகள் காப்பகம்’ அமைக்க வேண்டும் என்பது பெண்களின் பல்லாண்டு காலக் கோரிக்கை. அரசும் தனியார் நிறுவனங்களும் இதற்குச் செவிமடுத்ததாகத் தெரியவில்லை. பணிபுரியும் நிறுவனங்களும் குடும்பங்களும் கைவிடுகிற நிலையில், பெண்கள் என்ன செய்வார்கள்? குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளை விட்டுச் செல்வது எல்லாத் தரப்பினருக்கும் சாத்தியமில்லாத நிலையில், பெண்களுக்கு வேறு என்ன வழியை நாம் வைத்திருக்கிறோம்? வீட்டு வேலை, கட்டிட வேலை, சாலைப் பணி போன்ற முறைசாரப் பணிகளில் ஈடுபடும் பெண்கள் தங்கள் வேலைத்தளத்துக்கே குழந்தைகளை அழைத்துச் செல்வதும் அதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்படுவதும் நிகழ்கிறது. குழந்தைகள் இந்தச் சமூகத்தின் சொத்து என்பதை மனத்தில்கொண்டு, அரசும் தனியார் நிறுவனங்களும் தமது ஊழியர்களின் குழந்தைப் பராமரிப்பு சார்ந்த தேவைகள் குறித்து, இனியேனும் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.