பொறியியலில் தமிழ்ப் பாடம்: பாராட்டுக்குரிய முன்னெடுப்பு!

பொறியியலில் தமிழ்ப் பாடம்: பாராட்டுக்குரிய முன்னெடுப்பு!

Published on

தமிழ்நாட்டில் பொறியியல் படிக்கும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடங்கள் நிகழாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியிருப்பது பாராட்டுக்குரிய அறிவிப்பு. ஏற்கெனவே தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் இளங்கலைப் படிப்புகளிலும் இரண்டாம் ஆண்டிலும் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக அமைச்சரின் இந்த அறிவிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.

இளங்கலை படிப்புகளுக்குத் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டபோதே, அதிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது பொறியியல் மாணவர்களுக்கும் தமிழ்ப் பாடம் என்கிற அமைச்சரின் அறிவிப்பு மூலம் அந்தக் குறையைத் தீர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு 20% உள் இடஒதுக்கீட்டு முறை தற்போது பின்பற்றப்பட்டுவருகிறது. சாதாரண அரசுப் பணிகளுக்குக்கூடப் பொறியியல் படித்த மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிப்பதைக் காண முடிகிறது. இந்தச் சூழலில், அமைச்சரின் அறிவிப்பு பொறியியல் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.

இதேபோல அரசுப் பணிக்கான அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாளில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எனவே, அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு எழுதுபவர்கள் அனைவரும், தமிழ் மொழியில் அடிப்படைப் பயிற்சியைத் தொடர்ந்து பெற்றாக வேண்டிய தேவையும் உருவாகியுள்ளது. அந்த வகையில் பொறியியல் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் தமிழ்ப் பாடங்கள் அவர்களுக்கு அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க உதவுவதாக அமையும். மேலும் பொறியியல் கல்லூரிகளில் புதிய தமிழாசிரியர்களுக்கான பணியிடங்கள் உருவாகும். இது அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும்.

வளர்ந்த நாடுகள் பலவும் மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற தொழில்முறை பாடப் பிரிவுகளைத் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்கின்றன. பொறியியல் கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாக வழங்குவதோடு நின்றுவிடாமல், தமிழ்வழியில் பொறியியல் படிப்புகளை வழங்கும் நடைமுறையைத் தொடங்க அரசு முன்வர வேண்டும். ஏற்கெனவே 2010இல் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அது முன்னெடுக்கப்பட்டது. எனினும், ஒரு தொடர் நிகழ்வாக மற்ற பகுதிகளில் அமையவில்லை. பொறியியல் கல்லூரிகளில் தமிழில் பாடங்களைக் கற்பிப்பதன் மூலம் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெற வழி ஏற்படும். இதைச் செயல்படுத்துவதில் சாத்தியக்கூறுகள் இல்லாமல் போகும்பட்சத்தில், மண்டலத்தில் ஒன்று என்ற அளவில் பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழியில் பாடங்கள் நடத்துவதைப் பற்றித் தமிழக உயர்கல்வித் துறை யோசிக்க வேண்டும்.

உயர்கல்வித் துறையில் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் பொறியியல் மட்டுமல்லாமல் கல்வியியல், சட்டம், மருத்துவம் போன்ற எல்லா படிப்புகளிலும் தமிழ் மொழியை ஒரு பாடமாக வைக்க அரசு முன்வர வேண்டும். இதிலிருந்து மற்ற மாநிலத்தவர்களுக்கு வேண்டுமானால் விலக்கு அளிக்கலாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in