

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பரவலாகப் பெய்துவருகிறது. இதனால் மழைக்கால நோய்கள் பரவும் அபாயமும் இருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவிவருவது கவனத்துக்குரியது. ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரை 3,396 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. செப்டம்பரில் 572 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபரில் பாதிப்பு 616 ஆக அதிகரித்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் டெங்குவால் ஏற்படும் இறப்பு அதிகரித்துவரும் நிலையில், அதற்கு அருகே இருக்கும் இந்திய மாநிலமான மேற்கு வங்கத்திலும் அக்டோபரில் மட்டும் 800 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இந்தியாவில் 2021இல் சுமார் இரண்டு லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்; 2017-க்குப் பிறகு, இதற்குப் பலியானோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 300ஐக் கடந்தது. இந்த ஆண்டு செப்டம்பர் 31 வரையிலான புள்ளிவிவரங்களின்படி, இந்திய அளவில் 63,280 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,000-க்கும் அதிகமான பாதிப்புகளுடன் தெலங்கானா முதலிடத்தில் உள்ளது; அதற்கு அடுத்தபடியாக கர்நாடகம் உள்ளது. 4,000-க்கும் அதிகமான பாதிப்புகளுடன் தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 4,000-க்கும் குறைவான பாதிப்புகள் இருந்தபோதும் இறப்பில் கேரளம் (20 பேர்) முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இறப்பு விகிதத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளன; இது நல்ல அறிகுறி இல்லை.
கொசுக்களால் பரவக்கூடிய நோய் டெங்கு. இதற்குக் காரணமான ஏடீஸ் கொசு இனம் தமிழகத்தில் பரவலாகக் காணப்படக்கூடியது. வீடுகளில் தேங்கியிருக்கும் சுத்தமான தண்ணீரிலும் இவை உற்பத்தியாகும். மழைக்காலத்தில் சாலைகளில் மழைநீர் தேங்குவதும் பல்வேறு நோய்களுக்கு வித்திடக்கூடும். இதனால் டெங்கு, பிற மழைக்கால நோய்கள் ஆகியவற்றின் பரவல் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக இருக்கும். பூச்சிகள், கொசுக்கள் வழி பரவும் நோய்களுக்கான ஒருங்கிணைந்த தேசியத் தடுப்புத் திட்டதின்கீழ் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திவருகிறது. மாநில அரசும் உள்ளாட்சி, வருவாய்த் துறைகள் வழியாகப் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சாலைகளில் தேங்கும் தண்ணீரை உடனுடக்குடன் வெளியேற்றி கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மாநில உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டுவருகின்றன. இந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழக அரசு பொருட்படுத்தத்தக்க வகையில் இந்நடவடிக்கைகள் சார்ந்து செயலாற்றிவருவது பாராட்டுக்குரியது.
அதே நேரம் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் மக்களின் பங்களிப்பு அவசியம். வீடுகளில் தண்ணீரைத் திறந்தநிலையில் வைக்காமல் இருப்பது, வீட்டுக்கு அருகில், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது மக்களின் கடமை. அதைச் சோதனையிட்டு உறுதிப்படுத்த வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்குவதும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது. மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகளுடன் நாமும் இணைந்து செயல்பட வேண்டும்.