

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு அரசு வேலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு வழங்குவதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 103ஆம் சட்டத் திருத்தம் செல்லும் என, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு நவம்பர் 7 அன்று தீர்ப்பளித்தது. பொருளாதார நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் இடஒதுக்கீடு, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறவில்லை என தலைமை நீதிபதி யு.யு.லலித்தையும் உள்ளடக்கிய இந்த அமர்வு கூறியுள்ளது.
மத்திய அரசு 2019இல் கொண்டுவந்த 103ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் தீர்ப்பளிக்க, சட்டத் திருத்தம் செல்லாது எனத் தலைமை நீதிபதி லலித்தும் நீதிபதி ரவீந்திர பட்டும் தீர்ப்பளித்தனர். இதனால் 3:2 என்னும் பெரும்பான்மை அடிப்படையில் 103ஆம் சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. செல்லாது எனத் தீர்ப்பளித்த நீதிபதிகளும்கூடப் பட்டியலினத்தவர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் ஏற்கெனவே சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டைப் பெறுகிறார்கள் என்பதற்காகப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டு வரம்பில் சேர்க்காதது அரசமைப்புச் சட்டம் அனுமதிக்காத பாகுபாடு என்றுதான் கூறியிருக்கிறார்கள். பொருளாதார நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு வழங்குவதை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்திரா சாஹனி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு (1992) இடஒதுக்கீட்டுக்கு 50% உச்ச வரம்பை நிர்ணயித்திருந்தது. எனவே, கூடுதலாக 10% இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிர்ப்பு எழுந்தது. ஆனால் பெரும்பான்மைத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் 50% உச்ச வரம்பு என்பது மாற்றப்படவே கூடாதது அல்ல; அந்த வரம்பு ஏற்கெனவே இடஒதுக்கீடு பெற்றுவரும் பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறியுள்ளனர். நூற்றாண்டைக் கடந்த சமூக நீதிப் போராட்டத்துக்குப் பின்னடைவு என இந்தத் தீர்ப்பு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். பொருளாதாரரீதியில் முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது என வேறு சில அரசியல் கட்சித் தலைவர்களும் கூறிவருகின்றனர். எந்தவொரு தீர்ப்பும் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டதல்ல. நீதிமன்றத் தீர்ப்புகளைச் சட்டத்துக்கு உட்பட்டு எதிர்க்கவும் மேல்முறையீடு செய்யவும் நீதி அமைப்பே பல்வேறு வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்ப்பவர்கள், சீராய்வு மனு தாக்கல் செய்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்பதற்கான காரணங்களை இன்னும் வலுவாக முன்வைத்து, தாம் எதிர்பார்க்கும் தீர்வை நீதிமன்றத்தின் மூலமாகவே பெற வேண்டும். மாறாக, நாட்டின் மிக உயரிய நீதி பரிபாலன அமைப்பான உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்புக்கும் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கும் உள்நோக்கம் கற்பிப்பது இந்திய ஜனநாயகத்தின் மீது உண்மையான மரியாதை கொண்டவர்கள் செய்யும் செயல் அல்ல.