

ஹரியாணா, உத்தரப் பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரம், ஒடிசா, தெலங்கானா ஆகிய ஆறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகி ஆளும் பாஜக-வுக்குப் புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இம்மாநிலங்களில் நடந்த 7 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 4 இடங்களை பாஜக கைப்பற்றித் தங்களது கை ஓங்கியிருப்பதை நிரூபித்துள்ளது. பிஹாரில் ஒரு இடத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், மகாராஷ்டிரத்தில் அந்தேரி கிழக்குத் தொகுதியை சிவசேனா (உத்தவ்) பிரிவும், தெலங்கானாவில் நடந்த தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் என மூன்று கட்சிகளும் தலா ஒரு இடத்தைப் பிடித்துள்ளன. இதில் தெலங்கானா முனுகோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டதுடன் டெபாசிட்டையும் இழந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், அந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பல்வாய் ஸ்ராவந்தி 2014ஆம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர். அவர் அப்போது பெற்ற வாக்குகளைக்கூட காங்கிரஸ் சார்பில் தற்போது பெற முடியவில்லை என்பது பரிதாபத்தின் உச்சம்.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய காங்கிரஸ், மக்களிடம் இருந்து விலகிச் சென்றுவிட்டது என்பதற்கான அடையாளமாகவே இந்தத் தேர்தல் முடிவு பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமை வலுவாக இல்லாதது, காங்கிரஸ் தலைவர்கள் மக்களிடம் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருப்பது, மக்கள் பிரச்சினைகளில் காங்கிரஸ் கவனம் செலுத்தாமல் இருப்பது எனக் காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ராகுல் காந்தியின் நடைபயணம் கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுத்தர எந்த அளவுக்கு உதவப்போகிறது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் தாங்கள்தான் வலுவான கட்சி என்பதை பாஜக மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அடுத்து வரவிருக்கும் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக-வே ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இன்னும் குறிப்பாக குஜராத்தில் 56% வாக்காளர்கள் பாஜக-வுக்குச் சாதகமாகவும் 20% வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சிக்குச் சாதகமாகவும் 17% வாக்காளர்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக இருப்பதாகவும் கணிப்புகள் வெளிவந்துள்ளன. காங்கிரஸ் தற்போது வகித்துவரும் இரண்டாமிடத்தைக்கூட ஆங்காங்கே ஆம் ஆத்மி மற்றும் சில மாநிலக் கட்சிகளிடம் பறிகொடுத்துவருவது அதன் பரிதாப நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே முக்கியத்துவம் எதிர்க்கட்சிக்கும் உண்டு. இரண்டும் வலுவாகச் செயல்பட்டால் மட்டுமே ஜனநாயகம் தழைக்கும். கட்சியின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, புதிதாகத் தலைமைப் பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கே தனது பணியைச் சுதந்திரமாகக் கவனிக்க அனுமதித்து, தவறு செய்பவர்கள் எவ்வளவு செல்வாக்கானவர்களாக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை அவருக்கு வழங்குவது போன்ற மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக மாற முடியும்.