

இந்திய - இலங்கை எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் நிகழ்வாகியுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் நிகழ்த்தப்படும் தாக்குதல்களைத் தாண்டி, இப்போது இந்தியக் கடற்படையினரும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் படகுகளில் இந்திய தேசியக் கொடி கட்டப்பட்டிருந்தபோதும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் எனச் சந்தேகித்திருந்தாலும் எல்லை தாண்டும் மீனவர்களைச் சுடுவதைச் சர்வதேசச் சட்டங்கள் அனுமதிப்பதில்லை என்பதும் கவனம்கொள்ளத்தக்கது. 2017இல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் ஒவ்வொரு முறையும் ‘எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள்’ என்று சொல்லப்படுகிறது. இதற்கான பின்னணி நீண்ட வரலாறு உடையது. மீன்வளம் அதிகம் உள்ள இந்திய-இலங்கைக் கடற்பகுதியின் உரிமை யாருக்கு என்பது, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே சர்ச்சைக்கு உரியதாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்த காலகட்டத்தில் கச்சத்தீவு உரிமை குறித்துத் திட்டவட்டமாக எதுவும் வரையறுக்கப்படவில்லை. அதனால் அதற்குப் பிறகும் இந்நிலை தொடர்ந்தது.
1974இல் அன்றைய இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டாரநாயக – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இருவருக்கும் இடையே கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவின் மீதான உரிமை இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது. இதன் பிரிவு 5, 6இல் இந்திய மீனவர்கள், புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் கச்சத்தீவுக்கு வருவதற்குப் பயண ஆவணங்கள் அல்லது நுழைவுச் சீட்டு தேவையில்லை என்றும் அவர்கள் அந்த நீர்ப்பரப்பில் தங்கள் படகுகளை நிறுத்திக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகும் கச்சத்தீவுப் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதும், தமது வலைகளை உலர்த்துவதும் எந்தப் பிரச்சினையும் இன்றித் தொடர்ந்தன. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையான சம்பவம் 1980-களில்தான் தொடங்கியதாகத் தெரிகிறது. அதற்கான காரணங்களில் ஒன்றாக இலங்கை விடுதலைப் போர்ச்சூழல் பின்னணியையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், போர் முடிந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் பிரச்சினை தொடர்வதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, கச்சத்தீவு ஒப்பந்தம்.
அந்த ஒப்பந்தத்தில் தமிழர்களின் மீன் பிடிக்கும் உரிமை பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. கச்சத்தீவின் உரிமைக்காக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது; 1974 கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. ஆனால், கச்சத்தீவில் மீன் பிடிக்கத் தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஆகவே, மத்திய அரசின் நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாகவும் மீனவர்களுக்கு எதிரான இந்தத் தொடர் தாக்குதல்களைப் பார்க்கலாம். இந்திய ஒருமைப்பாட்டை மக்கள் மட்டுமல்ல, அரச நிர்வாகமும் பாதுகாப்புப் படைகளும் காக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.