

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. இது தமிழகம் முழுவதும் சீரான மழைப்பொழிவைக் கொண்டுவந்தாலும், டெல்டா, வட தமிழகப் பகுதிகளே மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாக இருக்கின்றன. தலைநகர் சென்னையில் கடந்த ஆண்டு பருவமழையின் பாதிப்புகள், 2015 பெருமழை வெள்ளக் காலத்தை நினைவுபடுத்துவதாக அமைந்தன. பருவமழைக் காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில், மக்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே அரசின் தலையாய பணி. அந்த வகையில் கடந்த ஆண்டு மழை, வெள்ளப் பாதிப்புகளிலிருந்து அரசு நிர்வாகம் பாடம் படித்திருப்பதை உணர முடிகிறது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின்படி, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நகரம் முழுவதும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தப் பணிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணனின் மரணத்துக்குப் பிறகு சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவுபெறாத அனைத்து இடங்களிலும் தடுப்புகளும் எச்சரிக்கை அறிவிப்புகளும் வைக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அது மட்டுமே போதாது.
மழைக் காலத்தில் மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பது சவாலான பணி. சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் மின்கசிவின் காரணமாக மனிதர்களும் விலங்குகளும் பலியாவது தொடர்கதையாக உள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் சாலைத் தடுப்பைக் கடக்க முயன்ற ஐ.டி. ஊழியர் மின்சாரம் பாய்ந்து கடந்த வாரம் உயிரிழந்தார், வியாசர்பாடியில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்; பசு மாடு ஒன்றும் சென்னையில் இவ்வாறு சமீபத்தில் இறந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் மின்கசிவைத் தடுக்கும் வகையில் தெருவிளக்குகள், மின்பெட்டிகள், மின்நிறுவல்களை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொண்ட குழு சோதனை செய்யத் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. இந்தப் பணிகள் தமிழகம் முழுவதும் தொடரப்பட வேண்டும். தேங்கியுள்ள மழைநீரில் கால்வைப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். விலங்குகளைச் சாலைகளில் திரிய விடாமல், அவற்றின் உரிமையாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும். பருவமழைக் காலத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளப் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம். கடந்த காலத்தில் பருவமழை பல படிப்பினைகளை வழங்கியிருந்தாலும், ஒருநாள் கனமழைக்கே சென்னை பெரும் பாதிப்புகளைச் சந்திப்பது தொடர்கதையாகிவருகிறது. சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உட்பட சென்னையின் வடிநிலப் பகுதிகளும் பாதிப்பைச் சந்திக்கின்றன. திட்டமிடப்படாத நகரமயமாக்கல், பராமரிப்பில்லாத மழைநீர் வடிகால்கள், வாய்க்கால்களின் வழித்தட ஆக்கிரமிப்புகள், அடைப்புகள் முழுமையாக அகற்றப்படாதது போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளே இதற்குக் காரணம். அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நீர் மேலாண்மைத் திட்டங்கள் குறித்துச் சிந்தித்து, நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட வேண்டியது காலத்தின் கட்டாயம்.