

தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் உக்கடம் காவல் எல்லைக்கு உட்பட்ட ஒரு கோயில் முன்பு நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவமும் அதன் தொடர்பாக வெளியாகிக்கொண்டிருக்கும் புலனாய்வுத் தகவல்களும் தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. கோவை மாநகரம் வகுப்புவாதரீதியில் ஓர் இலக்காக இருந்துவருவது மீண்டும் கவனத்துக்கு வந்துள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் 1997இல் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த மதக் கலவரம், 58 பேரைக் காவு வாங்கிய 1998 தொடர் குண்டுவெடிப்பு ஆகியவை தமிழக வரலாற்றில் ஆறாத வடுக்களாக உள்ளன. தமிழகத்தில் மதப் பதற்றம் உள்ள ஒரு பகுதியாகவே கோவை பார்க்கப்படும் சூழலில், தற்போதைய இந்த கார் வெடிப்புச் சம்பவம், அந்நகரில் மீண்டும் மத மோதல்களுக்கு வித்திடத் துணியும் தீவிரவாதக் குழுக்கள் தலையெடுக்கின்றனவா என்ற கேள்வியை அழுத்தமாக எழுப்புகின்றது.
கார் வெடிப்புச் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட தடயங்களும் மரணமடைந்த ஜமேஷா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்களும் அவர் தீவிரவாத நோக்கத்துடன் செயல்பட இருந்ததை அம்பலப்படுத்துவதாகவே உள்ளன. நல்லவேளையாக அப்படி எதுவும் நடைபெறவில்லை. 2019 இல் முபின் தேசியப் புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ) விசாரணை வளையத்தில் இருந்தவர் என்பதும் அப்படிப்பட்டவர் தொடர் கண்காணிப்பில் இல்லாமல் போனதையும் இச்சம்பவம் உணர்த்துகிறது. இது உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் தோல்வியாகக் கருத இடமளித்திருக்கிறது.
அதேவேளையில், கார் வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற உடனே தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உயரதிகாரிகள் கோவைக்கு வந்ததும், 24 மணி நேரத்துக்குள் முபின் வீட்டில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவருடைய கூட்டாளிகள் ஐவர் கைது செய்யப்பட்டதும் தமிழகக் காவல் துறையின் பாராட்டுக்குரிய நடவடிக்கைகள். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கோவை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த பாட்ஷாவின் உறவினர் என்பதும் கவனிக்கத்தக்கது. முபின் ஏற்கெனவே என்.ஐ.ஏ.-வின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்ற நிலையில், இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க தமிழக அரசு பரிந்துரைத்திருப்பது சரியான நடவடிக்கையே.