

இந்திய ரூபாய் நோட்டுகளில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படத்தோடு இந்துக் கடவுளரான லட்சுமி, விநாயகர் படங்கள் அச்சிடப்பட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது தேசிய அரசியலில் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
கேஜ்ரிவாலின் இந்தக் கருத்தை பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் கடுமையாக விமர்சித்துள்ளன. பாஜக ஆட்சி செய்துவரும் குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் வருவதை ஒட்டித் தன்னை இந்து ஆதரவாளராகக் காண்பித்துக்கொள்வதற்காக கேஜ்ரிவால் இப்படிப் பேசியிருப்பதாக பாஜக கூறியுள்ளது. மேலும், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு எதிரான கருத்துகளைப் பேசிய கேஜ்ரிவால், இப்போது இப்படிப் பேசியிருப்பது இந்துக்களைக் கவர்வதற்கான தேர்தல் தந்திரம் என்று பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறியிருக்கிறார். அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பாஜக, ஆர்.எஸ்.எஸ்., ஆகியவற்றின் துணை அமைப்பு என்கிற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு வலுக்கூட்ட இந்தத் தருணத்தைக் காங்கிரஸ் பிரமுகர்கள் பயன்படுத்திவருகிறார்கள்.
அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கெடுத்து, பின்னர் ஆம் ஆத்மி என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கியவர் கேஜ்ரிவால். டெல்லியில் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சி செய்துவரும் ஆம் ஆத்மி, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று, பஞ்சாபிலும் முதல் முறையாக ஆட்சியமைத்தது. பிற மாநிலங்களில் ஆட்சியமைப்பதிலும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கான மாற்றாகத் தன்னை முன்னிறுத்துவதிலும் தீவிர ஆர்வம் செலுத்திவருகிறது. இந்தச் செயல்திட்டத்தின்படி இந்துத்துவக் கொள்கைரீதியாகப் பாஜகவை ஆதரித்தாலும் அதன் ஆட்சி, நிர்வாகத்தின் மீது அதிருப்தியடைந்திருக்கும் இந்துக்களைக் கவர்ந்திழுக்கும் உத்தியின் ஒரு பகுதிதான் கேஜ்ரிவாலின் இத்தகைய பேச்சு என்று ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சிலர் ஒப்புக்கொள்கின்றனர்.
பல மதங்களைப் பின்பற்றுவோரும் எந்த மதத்தையும் பின்பற்றாதோரும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக வாழும் நாடு இந்தியா. அதனால்தான் நம் நாட்டின் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் போன்ற மதம்சாரா அடையாளங்கள் மட்டுமே அச்சிடப்படுகின்றன. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சட்டமேதை அம்பேத்கர் உள்ளிட்ட பிற தலைவர்களின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும் என்னும் கோரிக்கைகளை ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பொறுப்பில் இருக்கும் ரிசர்வ் வங்கி நிராகரித்து வந்துள்ளது. இந்தப் பின்னணியில் ஒரு மதத்தைச் சேர்ந்த ஒரு சில கடவுளரின் படங்கள் நோட்டில் அச்சிடப்பட வேண்டும் என்று கோருவது இதேபோன்ற மேலும் பல மதத்தவரின் கோரிக்கைகளுக்கும் வழிவகுக்கும். இப்படி எழும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது சாத்தியமில்லை.
நம் நாடு பொருளாதாரரீதியான சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் சூழலில், அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பரிந்துரைக்க வேண்டுமே தவிர, தேர்தல் கணக்குகளின் அடிப்படையிலான இதுபோன்ற அடையாள அரசியலில் முட்டிமோதிக்கொண்டிருப்பது நாட்டுக்கும் மக்களுக்கும் எந்தவிதப் பயனையும் அளிக்காது.